ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனாவுக்கு முதியவர் பலி - தமிழகத்தில் சாவு எண்ணிக்கை 10 ஆக உயர்வு
கொரோனாவால் பாதிக் கப்பட்டு ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற முதியவர் இறந்தார். இதனால் மாநிலத்தில் சாவு எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது.
ஈரோடு,
ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா சிறப்பு வார்டில் பெருந்துறையை சேர்ந்த 67 வயது ஆண் ஒருவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இருந் தார். அவரது ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இறந்தார். அவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்ததாக நேற்று மாலை சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியான முதல்நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று முன்தினம் வரை 9 ஆக இருந்தது. நேற்று ஈரோட்டில் ஒருவர் உயிரிழந்ததால், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 10 ஆக உயர்ந்தது. நேற்று தமிழகத்தில் 58 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் 51 ஆயிரத்து 996 பேர் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 165 பேர் அரசு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 58 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 969 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இதுவரை 9 ஆயிரத்து 842 பேருக்கு சளி மற்றும் ரத்த மாதிரிகள் எடுக் கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. அதில் 7 ஆயிரத்து 779 பேருக்கு கொரோனா நோய் தொற்று இல்லை என தெரியவந்துள்ளது. மேலும் 1,094 பேரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை.
தமிழகத்தில் நேற்று பாதித்த 58 பேரில் திருவள்ளூர் மாவட்டத்தில் 16 பேரும், நாகப்பட்டினத்தில் 12 பேரும், கோவையில் 11 பேரும், சென்னையில் 10 பேரும், திருச்சியில் 3 பேரும், நீலகிரியில் 2 பேரும், திண்டுக் கல், செங்கல்பட்டு, கடலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.