தேவையின்றி வலம்வரும் வாகனங்களுக்கு பெயிண்ட் அடித்து கண்காணிப்பு - போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் தகவல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி தேவையின்றி வாகனங்களில் வருபவர்களை அடையாளம் காணும் வகையில் வாகனங்களில் வண்ண பெயிண்ட் அடித்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் தெரிவித்துள்ளார்.

Update: 2020-04-11 21:30 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் கூறியதாவது:- மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவினை அமல்படுத்தி உள்ள நிலையில் மக்கள் நலன் கருதி அதனை தீவிரமாக கடைபிடிக்க மாவட்ட காவல்துறை சார்பில் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தேவையின்றி வாகனங்களில் சுற்றித்திரிபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் சிலர் தேவையின்றி வாகனங்களில் சர்வ சாதாரணமாக சுற்றித்திரி கின்றனர். இதுகுறித்து ரோந்து போலீசார் விசாரித்தால் காய்கறிகள், உணவு பொருட்கள் வாங்க வருவது போன்ற காரணங்களை கூறி வருகின்றனர். இன்றுதான் வெளியில் வருகிறேன். இதற்கு முன்னர் வரவில்லை என்று தொடர்ந்து கூறி வருகின்றனர். இதுபோன்ற செயல்களை தவிர்க்கும் வகையில் ஒரே நபர் தொடர்ந்து தினமும் வாகனங்களில் சுற்றித்திரிவதை தடுக்கும் நோக்கில் பெயிண்ட் அடித்து கண்காணிக்கும் புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு நேரத்தில் சாலைகளில் செல்லும் வாகனங்களை நிறுத்தி சம்பந்தப்பட்டவரிடம் காரணம் குறித்து விசாரிக்கப்படும். மேலும் அவரின் வாகனத்தின் முன்பக்க சக்கரம் மற்றும் மட்கார்டு பகுதியில் வண்ண பெயிண்ட் அடையாளமாக பூசப்படும். இந்த வாகனம் அடுத்த 5 நாட்களுக்கு இடையில் வெளியில் வந்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படுவதோடு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஊரடங்கு உத்தரவு அரசின் அறிவிப்பின்படி வருகிற 14-ந்தேதி வரை உள்ளதால் 5 நாட்களை கருத்தில் கொண்டு ஒவ்வொரு நாளும் வெள்ளை, சிவப்பு, ஊதா, இளஞ்சிவப்பு என ஒவ்வொரு வண்ணம் பூசப்படும். இதன்மூலம் அந்த வாகனம் 5 நாட்களுக்கிடையில் வெளியில் சுற்றினால் வாகனத்தில் பூசப்பட்டுள்ள வண்ணத்தின் அடிப்படையில் இதற்கு முன் அந்த வாகனம் எந்த நாளில் வெளியில் வந்தது என்பது தெளிவாக தெரிந்துவிடும். இதன்படி மாவட்டம் முழுவதும் சாலைகளில் தேவையின்றி சுற்றிய நபர்களின் வாகனங்களில் வெள்ளை நிற பெயிண்ட் பூசப்பட்டுள்ளது.

எந்த தேவையாக இருந்தாலும் 5 நாட்கள் இடைவெளிக்கு முன்னதாக வந்ததும் உறுதியாகிவிடும். இதன்மூலம் வாகனத்தின் வண்ண ஆதாரத்தின் அடிப்படையில் வழக்குபதிவு செய்து வாகனம் பறிமுதல் செய்யப்படும். இந்த நடைமுறையை அனைத்து காவல்நிலையங்கள் மற்றும் ரோந்து போலீசார், போக்குவரத்து போலீசார் தீவிரமாக கடைபிடித்து நடைமுறைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 

அரசின் ஊரடங்கு உத்தரவினை மீறுபவர்களை தண்டிப்பது எங்கள் நோக்கமல்ல. கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து மக்களை காப்பாற்றுவதே நோக்கமாகும். இவ்வாறு அவர் கூறினார். கொரோனா பரவலை தடுக்கும் வகையில் வெளியில் தேவையின்றி சுற்றித் திரிவதை தடுக்க மாவட்ட காவல்துறை எடுத்துள்ள இந்த நடவடிக்கை அனைத்து தரப்பினர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் செய்திகள்