தென்காசியில் கொரோனா அச்சம்: காய்ச்சலால் பாதித்தவர் வசித்த தெருவை மூடிய பொதுமக்கள்

தென்காசியில் கொரோனா அச்சம் காரணமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் வசித்த தெருவை பொதுமக்களே மூடி விட்டனர்.

Update: 2020-04-11 22:45 GMT
தென்காசி, 

கொரோனா பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. தென்காசி மாவட்டத்தில் இதுவரை 3 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு நெல்லையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதில் 2 பேர் குற்றாலம் அருகே உள்ள நன்னகரம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர்கள். இதனால் அந்த பகுதி சீல் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் யாரும் செல்ல முடியாதவாறு தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். இந்தநிலையில் தென்காசி புதுமனை 2-வது தெருவில் வசித்து வரும் ஒருவருக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதற்கட்ட பரிசோதனை செய்வதற்காக ரத்த மாதிரி மற்றும் சளி மாதிரி எடுக்கப்பட்டது. இதனால் அச்சமடைந்த அவர் வசித்து வந்த பகுதியை சேர்ந்தவர்கள், அந்த தெருவை பேரிகார்டு மூலம் தாங்களாகவே மூடினர். இந்த பகுதிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வெளியில் இருந்து யாரும் உள்ளே வரவும், உள்ளே இருந்து யாரும் வெளியே செல்லவும் அனுமதிக்கப்படுவது இல்லை. இதுகுறித்து நகரசபை சுகாதாரத்தறை அதிகாரிகளிடம் கேட்டபோது, காய்ச்சல் வந்தவருக்கு முதல் பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்று வந்துள்ளது. மற்றொரு முறை பரிசோதனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றனர். மேலும் நகரசபை மூலம் சம்பந்தப்பட்ட தெருவுக்கு சீல் வைக்கவில்லை என்றும் கூறினார்கள்.

மேலும் செய்திகள்