3 நிற அட்டைகளை பொதுமக்கள் பயன்படுத்துவது எப்படி? - அதிகாரிகள் விளக்கம்
நெல்லையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள 3 நிற அட்டைகளை எப்படி பயன்படுத்த வேண்டும்? என்று பொதுமக்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
நெல்லை,
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இதையும் மீறி பொதுமக்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. எனவே இதை தடுக்க அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் நெல்லை மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் வெளியே வருவதை ஒழுங்குபடுத்தும் வகையில் 3 நிற அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளது. முதல் கட்டமாக மேலப்பாளையத்தில் பொதுமக்களுக்கு நேற்று இந்த அட்டைகள் வழங்கப்பட்டது.
இதில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அட்டையில் குறிப்பிட்டு நாட்களில் மட்டுமே அவர்கள் வெளியே வந்து அத்தியாவசிய பொருட்களை வாங்கி செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த அட்டையை எப்படி பயன்படுத்த வேண்டும்? என்று அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
பொதுமக்களுக்கு நீலம், சிவப்பு, பச்சை என 3 நிறங்களில் அட்டைகள் வழங்கப்பட்டு உள்ளது. இது அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு வெளியே செல்லும் அனுமதி சீட்டு ஆகும்.
இதில் நீல நிற அட்டை வைத்திருப்போருக்கு செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும். சிவப்பு நிற அட்டைதாரர்களுக்கு புதன் மற்றும் சனிக்கிழமை மட்டுமே அனுமதி அளிக்கப்படும். பச்சை நிற அட்டைதாரர்களுக்கு திங்கள் மற்றும் வியாழக்கிழமை மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.
இந்த அட்டை காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே செல்லத்தக்கது. குறிப்பிட்ட நிற அட்டைதாரர்கள் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட நாட்கள் மற்றும் நேரத்துக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். மருத்துவ அவசரத்துக்கு விதிவிலக்கு அளிக்கப்படும். இந்த அட்டையை வைத்திருப்பவர் ஒருவர் மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர அனுமதி அளிக்கப்படும். 15 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே இந்த அட்டையை பயன்படுத்தி வெளியே வந்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள். நடந்து செல்லும் போதும், வாகனத்தில் செல்லும் போதும், வாகனத்தை நிறுத்தும் இடம், பொருட்களை வாங்கும் போதும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். இந்த அட்டையுடன் ஏதேனும் ஒரு அடையாள அட்டையையும் உடன் எடுத்து செல்ல வேண்டும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
இதுதவிர மேலும் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வர இருப்பதாகவும் கூறப்படுகிறது.