ஊரடங்கை பயன்படுத்தி கொள்ளை முயற்சியா? நாகர்கோவிலில் ஏ.டி.எம். மையம், மருந்து கடை கண்ணாடி உடைப்பு - போலீசார் விசாரணை

நாகர்கோவிலில் ஏ.டி.எம். மையம், மருந்து கடை கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை பயன்படுத்தி கொள்ளை முயற்சி நடந்ததா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2020-04-10 22:30 GMT
நாகர்கோவில், 

நாகர்கோவில் கோட்டார் மார்க்கெட் பகுதியில் ஒரு தனியார் ஏ.டி.எம். மையம் உள்ளது. இதில் பணம் எடுப்பதற்காக நேற்று காலை பொதுமக்கள் ஏ.டி.எம். மையத்துக்கு சென்றனர். ஏ.டி.எம். மைய கண்ணாடி உடைக்கப்பட்டு நொறுங்கி கிடந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே பொதுமக்கள் கோட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் ஏ.டி.எம். மையத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.

இதற்கிடையே பறக்கை சந்திப்பு பகுதியில் உள்ள ஒரு மருந்து கடை முகப்பு கண்ணாடியும், கடையின் பூட்டும் உடைக்கப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்றும் பார்வையிட்டனர். ஆனால் கடையில் பொருட்கள் எதுவும் திருட்டு போகவில்லை. இதையடுத்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை கைப்பற்றி அதில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் கூறுகையில், ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இடலாக்குடி பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரி முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 108 ஆம்புலன்ஸ் கண்ணாடியை அந்த வழியாகச் சென்ற மனநலம் பாதிக்கப்பட்ட நபர் உடைத்தது, அங்குள்ள கண்காணிப்பு கேமரா மூலம் தெரியவந்துள்ளது. இதேபோல் மனநலம் பாதிக்கப்பட்ட யாரோ ஏ.டி.எம். மையம் மற்றும் மருந்து கடையின் கண்ணாடிகளை உடைத்து இருக்கலாம் என சந்தேகிப்பதாக தெரிவித்தனர். மேலும் ஊரடங்கை பயன்படுத்தி கொள்ளை முயற்சி நடந்ததா? என விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்