திருப்பத்தூர் மாவட்டத்தில், ஊரடங்கு உத்தரவு கடுமையாக்கப்படும் - கலெக்டர் சிவன்அருள் பேட்டி

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு கடுமையாக்கப்படும் என்று கலெக்டர் சிவன்அருள் கூறினார்.

Update: 2020-04-10 22:30 GMT
ஆம்பூர், 

திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16-ஆக உயர்ந்துள்ளது. இந்தநிலையில் கொரோனா தொற்று மேலும் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து அரசு அதிகாரிகள், வணிகர் சங்க பிரதிநிதிகள், தோல் தொழிலதிபர்கள் சங்கத்தினர் உள்ளிட்டவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஆம்பூர் வர்த்தக மையத்தில் மாவட்ட கலெக்டர் ம.ப. சிவன் அருள் தலைமையில் நடந்தது.

மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு பொ.விஜயகுமார், வாணியம்பாடி உதவி கலெக்டர் காயத்ரி சுப்பிரமணி, துணைபோலீஸ் சூப்பிரண்டு சச்சிதானந்தம், தாசில்தார் செண்பகவல்லி, நகராட்சி ஆணையாளர் த.சவுந்தரராஜன், மாதனூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரகு, நலங்கிள்ளி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்துக்கு பின்னர் கலெக்டர் சிவன்அருள் கூறியதாவது:-

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் 7 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆம்பூரில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 13 பேர் உள்ளனர். அதனால் ஆம்பூரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தடை உத்தரவு அமலில் இருந்தாலும் பொதுமக்கள் தங்களுடைய வீடுகளை விட்டு வெளியில் வந்து சென்று கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் சுயகட்டுப்பாட்டுடன் வீடுகளிலேயே தங்கியிருக்க வேண்டியது அவசியமாகும். ஆம்பூரில் அதிகபட்சமாக 13 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் ஊரடங்கு உத்தரவை கடுமையாக்குவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

ஆம்பூரிலிருந்து தடை உத்தரவு படிப்படியாக திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் கடுமையாக்கப்பட உள்ளது. காய்கறி உள்பட அனைத்து கடைகளையும் மூடுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இது படிப்படியாக அமல்படுத்தப்படும். மருந்து, காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்ளிட்டவை பொதுமக்களின் வீடுகளுக்கே கொண்டு சென்று விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் பொதுமக்களுக்கு கொரோனா தொற்று குறித்து ராப்பிட் பரிசோதனை மேற்கொள்ளும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்