பெங்களூருவில் இருந்து காரில் புகையிலை பொருட்கள் கடத்தி வந்த வாலிபர் கைது - ஆரணியை சேர்ந்தவர்

பெங்களூருவில் இருந்து காரில் 9 மூட்டைகளில் புகையிலை பொருட்கள் கடத்தி வந்த ஆரணியை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-04-10 22:15 GMT
அணைக்கட்டு, 

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் நடமாட்டம், வாகன போக்குவரத்தை கட்டுப்படுத்தும் பணியில் போலீசார், வருவாய்த்துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் ஊரை சுற்றி வருகின்றனர். அவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். அதன்படி வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா போலீசார், கந்தனேரி கூட்ரோட்டில் இரவு பகலாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று அதிகாலை 4 மணி அளவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் கந்தனேரி கூட்ரோடு வழியாக வந்த வாகனங்களை சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த காரை நிறுத்தி டிரைவரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது டிரைவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறி உள்ளார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் காரில் சோதனை செய்தனர். சோதனையில் காரின் பின்பகுதில் 9 மூட்டைகளில் 150 கிலோ தடை செயய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

தொடர்ந்து டிரைவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் அவர் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த காமக்கூர்பாளையம் கிராமத்தை சேர்ந்த தாமோதரன் மகன் ஆதவன் (வயது 24) என்பதும், பெங்களூரு அத்திப்பள்ளியில் இருந்து ஆரணிக்கு புகையிலை பொருட்களை காரில் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதுதொடர்பாக பள்ளிகொண்டா இன்ஸ்பெக்டர் மனோன்மணி வழக்குப்பதிவு செய்து ஆதவனை கைது செய்தார். மேலும் காருடன், புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்