ஊரடங்கு உத்தரவு எதிரொலி: கொடைக்கானலில் 10 டன் சாக்லேட்டுகள் தேக்கம் - வியாபாரிகள் பாதிப்பு
ஊரடங்கு உத்தரவு எதிரொலியாக கொடைக்கானலில் உள்ள கடைகளில் 10 டன் சாக்லேட்டுகள் விற்பனை செய்யமுடியாமல் தேக்கம் அடைந்துள்ளன. இதனால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொடைக்கானல்,
‘மலைகளின் இளவரசி’, ‘கோடை வாசஸ்தலம்’ என்றெல்லாம் வர்ணிக்கப்படும் கொடைக்கானலுக்கு தமிழகம், வெளிமாநிலம், வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருகை தருவார்கள். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் விரும்பி சாப்பிடுவது என்றால் பிளம்ஸ் பழங்கள் தான் முதலில் ஞாபகத்திற்கு வரும். அதற்கு அடுத்தபடியாக விரும்பி சாப்பிடுவது, ஹோம் மேட் சாக்லேட்டுகள். கொடைக்கானலில் குடிசை தொழிலாக ஹோம்மேட் சாக்லேட்டுகளை பலரும் தயாரித்து வருகின்றனர். பின்னர் அவற்றை வியாபாரிகள் மொத்தமாக வாங்கி, கடைகள் மூலம் விற்பனை செய்து வருகின்றனர். கோடைகாலத்தில் நடைபெறும் மலர் கண்காட்சியை காண ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். அதனை கருத்தில் கொண்டு வியாபாரிகள், ஹோம் மேட் சாக்லேட்டுகளை அதிக அளவு தயாரித்து விற்பனைக்காக வைத்திருந்தனர்.
இந்தநிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் அத்தியாவசிய தேவையான காய்கறி, மளிகை பொருட்கள் விற்பனை கடைகளை தவிர, மற்ற கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. இதேபோன்று கொடைக்கானலில் உள்ள அனைத்து ஹோம் மேட் சாக்லேட் விற்பனை கடைகளும் அடைக்கப்பட்டன. இதனால் வியாபாரிகள் விற்பனைக்காக வைத்துள்ள சுமார் 10 டன் சாக்லேட்டுகள் தேக்கம் அடைந்துள்ளன.
இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-
கொடைக்கானல் பகுதியில் 700-க்கும் மேற்பட்ட ஹோம் மேட் சாக்லேட் விற்பனை கடைகள் உள்ளன. மலர் கண்காட்சி, கோடைகால சீசன் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு கடைகளில் அதிக அளவு சாக்லேட்டுகளை விற்பனைக்காக இருப்பு வைத்திருந்தோம். ஆனால் தற்போது ஊரடங்கு உத்தரவால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தேக்கம் அடைந்துள்ள சாக்லேட்டுகளை ஒருமாதம் வரையே வைத்திருக்க முடியும். தற்போது ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டு 18 நாட்கள் ஆகியுள்ளதால் சாக்லேட்டுகளை என்ன செய்வது என்று தெரியாமல் புலம்பி வருகிறோம். சாக்லேட்டுகள் விற்பனை ஆகாததால் ரூ.50 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த விஷயத்தில் நகராட்சி நிர்வாகம், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும் சில வியாபாரிகள் கூறுகையில், கடைகளில் இருப்பில் உள்ள சாக்லேட்டுகளை வெளியூர்களுக்கு எடுத்து செல்ல முடியாத நிலை உள்ளதால், நகரில் உள்ள பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க முடிவு செய்து இருப்பதாகவும் தெரிவித்தனர். இதற்காக அவர்களது கடைகளை குறிப்பிட்ட கால அவகாசம் கொடுத்து திறந்து சாக்லேட்டுகளை எடுக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.