25 பேருக்கு தான் கொரோனா பாதிப்பு: சமூக தொற்றாக பரவவில்லை
மதுரையில் 25 பேருக்கு தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை சமூக தொற்றாக பரவவில்லை என்று கலெக்டர் வினய் கூறினார்.
மதுரை,
மதுரை நகரில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபர்கள் வசிக்கும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளான மேலமடை, நரிமேடு மற்றும் தபால்தந்தி நகர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை பணிகளை மாநகராட்சி கமிஷனர் விசாகன் தலைமையில் கலெக்டர் வினய் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
மதுரை மாநகர் பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் மொத்தம் 25 நபர்கள். இவர்கள் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் தான். மதுரை நகரை பொறுத்தமட்டில் கொரோனா வைரஸ் சமூக தொற்றாக இதுவரை பரவவில்லை. மதுரை மாவட்டத்தில் மொத்தம் 10 இடங்களில் தான் கொரோனா வைரஸ் தொற்று உள்ளது.
இவற்றில் மதுரை மாநகரில் மேலமடை, நரிமேடு மற்றும் தபால் தந்தி நகரிலும், மதுரை புறநகரில் 7 இடங்கள் உள்ளன. இந்த 10 இடங்கள் தடுப்புகள் அமைக்கப்பட்டும், தனிமைப்படுத்தப்பட்டும் உள்ளன. நகர்புறங்களில் 1 கிலோ மீட்டர் அளவிற்கும், கிராமப்புறங்களில் 3 கிலோ மீட்டர் அளவிற்கும் வெளியே செல்லாதவாறு பாதுகாப்பு தடுப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பணியாளர்கள் மூலம் ஒவ்வொரு தெருவிற்கும் வீடு வீடாக சென்று வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க தினந்தோறும் கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகிறது. மதுரை நகரில் அத்தியாவசிய பொருட்கள் எந்தவித தட்டுப்பாடின்றி அனைத்து மக்களுக்கும் கிடைக்கிறது. வெளிமாநிலங்களில் இருந்து வரும் ஒரு சில பொருட்கள் மட்டும் தான் தட்டுப்பாடு இருக்கிறது. அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்றாலோ அல்லது பதுக்கி வைத்தாலோ சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.