ஊரடங்கால் டாஸ்மாக் கடைகள் அடைப்பு: தடம் மாறும் மதுபிரியர்கள் - கஞ்சா தேடி அலையும் அவலம்
ஊரடங்கு உத்தரவால் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. இதனால் மதுபிரியர்கள் தடம் மாறி கஞ்சா தேடி அலையும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
திருக்கோவிலூர்,
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 24-ந் தேதி மாலை 6 மணிக்கு அமலுக்கு வந்த 144 தடை உத்தரவால் தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இந்த தடை உத்தரவு வருகிற 14-ந் தேதி வரை அமலில் இருக்கும். இந்நிலையில் டாஸ்மாக் கடைகள் அடைப்பதற்கு முன்பாகவே பெரும்பாலான மதுபிரியர்கள் மதுபாட்டில்களை வாங்கி வீடுகளில் இருப்பு வைத்துள்ளனர்.
ஆனால் மதுபாட்டில்களை முன்னதாக வாங்காதவர்கள், தற்போது மதுபாட்டில்களை வாங்க அலைந்து திரிகின்றனர். இருப்பினும் அவர்களுக்கு மதுபாட்டில்கள் கிடைத்தபாடில்லை. இதனால் ஒரு சில நெட்டிசன்கள் டிக்-டாக் போன்ற சமூக வலைத்தளங்களில் டாஸ்மாக் கடைகளை ஏக்கத்துடன் பார்க்கும் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் தடை உத்தரவால் டாஸ்மாக் கடைகள் பூட்டியே கிடப்பதால், பல இடங்களில் கடைகளில் பூட்டை உடைத்து மதுபாட்டில்களை மர்மநபர்கள் அள்ளிச்சென்ற சம்பவங்களும் நடந்து வருகிறது. ஆனால் திருக்கோவிலூர் பகுதியில் உள்ள மதுபிரியர்கள் தற்போது தடம் மாறி, கஞ்சா தேடி அலைகின்றனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-
திருக்கோவிலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 15-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. 144 தடை உத்தரவால் இந்த கடைகள் அனைத்தும் தற்போது மூடப்பட்டுள்ளது. இதனால் ஒரு சிலர் மதுபானங்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
மேலும் தினசரி குடித்துதான் வாழவேண்டும் என்ற பழக்கத்திற்கு ஆளான மதுபிரியர்கள் தடம் மாறி, கஞ்சா விற்பனை செய்யும் இடங்களை தேடி அலைந்து திரிகின்றனர். இவர்கள் போலீஸ் கண்காணிப்பையும் மீறி, பல்வேறு இடங்களுக்கு சென்று கஞ்சா வாங்கி வந்து, அதன் மூலம் போதை ஏற்றிக்கொள்கின்றனர்.
இதனால் திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்த பெரும்பாலான மதுபிரியர்கள் தற்போது கஞ்சாவுக்கு அடிமையாகி வருகின்றனர். மேலும் பல இடங்களில் போலீசார் கண்காணிப்பையும் மீறி கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே கஞ்சா விற்பவர்கள் மற்றும் அதனை வாங்க அலைந்து திரியும் மதுபிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.