கொரக்கவாடியில் கொட்டிய ஆலங்கட்டி மழை - கிராம மக்கள் மகிழ்ச்சி

கொரக்கவாடியில் நேற்று ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Update: 2020-04-09 22:00 GMT
ராமநத்தம்,

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் ஊரடங்கால் வீட்டுக்குள் முடங்கி இருக்கிற மக்கள் உஷ்ணத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் வெப்பசலனம் காரணமாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

அந்த வகையில் நேற்று காலை முதல் வழக்கம் போல் சூரியன் சுட்டெரித்தது. இந்த நிலையில் மாலையில் திடீரென வானில் கருமேக கூட்டங்கள் திரண்டது. பின்னர் ராமநத்தம், திட்டக்குடி பகுதியில் சூறைக்காற்றுடன் கன மழையாக கொட்டியது. இதில் கொரக்கவாடி பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரமாக இந்த மழை நீடித்தது. இதைபார்த்த அந்த பகுதி மக்கள் ஆலங்கட்டிகளை சேகரித்து மகிழ்ந்தனர்.

கடலூர் நகரை பொறுத்தவரை இரவு 8 மணிக்கு மேல் வானில் கருமேக கூட்டங்கள் திரண்டு, குளிர்ந்த காற்று வீசியது. பின்னர் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்தது. இதனால் மின்தடை ஏற்பட்டது. இதனால் நகரில் இரவில் வெப்பம் தணிந்து காணப் பட்டது.

மேலும் செய்திகள்