நாமக்கல் மாவட்டத்தில், 2 வயது குழந்தை உள்பட 8 பேருக்கு கொரோனா பாதிப்பு - மொத்த எண்ணிக்கை 41 ஆக உயர்வு
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 2 வயது பெண் குழந்தை உள்பட மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 41 ஆக உயர்ந்து உள்ளது.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 33 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே நேற்று ராசி புரத்தை சேர்ந்த 2 வயது பெண் குழந்தை உள்பட மேலும் 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை சுகாதாரத்துறை உறுதி செய்து உள்ளது. இவர்களில் 5 பேர் ராசிபுரம் சிவன்கோவில் தெருவையும், ஒருவர் காதர் தெருவையும் சேர்ந்தவர்கள். மீதமுள்ள 2 பேர் பரமத்திவேலூரை சேர்ந்தவர்கள். இதில் 11 வயது சிறுவனும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் அனைவரும் டெல்லி மாநாட்டிற்கு சென்று ஏற்கனவே கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் நபர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்து உள்ளது.
இதற்கிடையே ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்கள் கண்டறியப்பட்டு, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களையும் தனிமைப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.