திருப்பூரில் இருந்து ரெயில் மூலமாக சென்னை, சேலத்துக்கு 6 லட்சம் முககவசங்கள் அனுப்பி வைப்பு

திருப்பூரில் இருந்து ரெயில் மூலமாக 6 லட்சம் முககவசங்கள் சேலம், சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Update: 2020-04-09 23:15 GMT
திருப்பூர், 

கோவை-சென்னைக்கு சரக்கு ரெயில் சேவை நேற்று முதல் வருகிற 14-ந் தேதி வரை இயக்கப்படுகிறது. மருத்துவ உபகரணங்கள், முககவசங்கள் உள்ளிட்ட சரக்குகளை ரெயில் மூலமாக அனுப்புவதற்கு தொழில்துறையினர் தொடர்பு கொள்ளலாம் என்று சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று காலை கோவையில் இருந்து சரக்கு ரெயில் புறப்பட்டு திருப்பூருக்கு காலை 9.20 மணிக்கு வந்தது.

திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் முககவசம் தயாரிக்கும் பணி நடக்கிறது. திருப்பூர் மாவட்ட வருவாய் அதிகாரி சுகுமார் கண்காணிப்பில் முககவசங்கள் தயாரிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் திருப்பூரில் இருந்து 6 லட்சம் முககவசங்கள் நேற்று சேலத்துக்கும், சென்னைக்கும் ரெயில் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டது. மொத்தம் 16 பெட்டிகளில் இந்த முககவசங்கள் வைக்கப்பட்டு ரெயில்வே ஊழியர்கள் ஏற்றி அனுப்பி வைத்தனர். திருப்பூர் வணிக பிரிவு மேலாளர் முத்துக்குமார் உடனிருந்தார்.

மேலும் செய்திகள்