திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26-ஆக உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26-ஆக உயர்ந்துள்ளது.

Update: 2020-04-09 23:45 GMT
திருப்பூர்,

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தமிழ்நாட்டில் இந்த நோய்தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது. ஆனாலும் கொரோனா வைரசை கட்டுக்குள் கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் டெல்லியில் நடந்த தப்லிக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்ட ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் அந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கும் இந்த நோய் தொற்று பரவி இருக்கலாம் என்றும், எனவே திருப்பூர் மாவட்டத்தில் இருந்து அந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் தாமாக முன்வந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு வர வேண்டும் என அரசு அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 69 பேர் இந்த மாநாட்டில் பங்கேற்றது தெரியவந்தது. இவர்களில் 59 பேர், திருப்பூர், தாராபுரம் மற்றும் உடுமலை அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தனர். மற்ற 10 பேர் யார்? யார்? என்று அடையாளம் காணும் முயற்சியில் சுகாதார துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதற்கிடையில் முதற்கட்டமாக டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டு, ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருபவர்களில் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.மேலும் லண்டன் சென்று வந்த திருப்பூரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது.

அதன்பின்னர் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனால் திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று இருப்பவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது. அதை தொடர்ந்து நேற்று முன்தினம் 2 பேருக்கும், நேற்று 2 பெண்கள் உள்பட மேலும், 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தற்போது கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை திருப்பூர் மாவட்டத்தில் 26-ஆக உயர்ந்துள்ளது.

இது குறித்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் கூறியதாவது:-

திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 2 பெண்கள் உள்பட மேலும், 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களின் சளி மற்றும் ரத்த மாதிரி பரிசோதனை மேற்கொண்டதில் அதில் கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் டெல்லி சென்று வந்த மணியக்காரம்பாளையத்தை சேர்ந்த ஒருவரின் 35 வயதுடைய மனைவி மற்றும் அவர்களது மகளான 16 வயது சிறுமிக்கும், தாராபுரத்தை சேர்ந்த 35 வயதுடைய ஒருவர், தேவராயம்பாளையத்தை சேர்ந்த 42 வயதுடைய ஒருவர் என 4 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் 4 பேரும் கோவை இ.எஸ்.ஐ. அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இது குறித்து மாநகராட்சி நகர் நல அலுவலர் பூபதி கூறியதாவது:-

திருப்பூரில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 26-ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் லண்டனுக்கு சென்று வந்த திருப்பூரை சேர்ந்த தொழிலதிபர் மட்டும் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு சென்று உள்ளார். கொரோனா பாதிப்புகள் உள்ள மங்கலம், அவினாசி தேவாரயம்பாளையம், உடுமலை, தாராபுரம் உள்ளிட்ட உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகள் மற்றும் அந்த பகுதிகளும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போதும் அதே பகுதியை சேர்ந்த சிலர் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ரத்த மாதிரி எடுத்து விரைவாக சோதனை செய்யப்படும். மேலும், அந்த பகுதியில் சளி, இருமல் உள்ளவர்கள் இருக்கிறார்களா? என மருத்துவ குழு மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்