ரூ.850-க்கு 18 வகையான மளிகை பொருள் தொகுப்பு - மாநகராட்சி ஏற்பாடு

15 நாட்களுக்கு தேவைப்படும் 18 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய ‘காம்போ பேக்’ ரூ.850-க்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Update: 2020-04-09 22:30 GMT
சென்னை, 

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு எந்தவித சிரமமுமின்றி அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் பெருநகர சென்னை மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அந்தவகையில் பொதுமக்களின் வீட்டிற்கே சென்று வாகனங்கள் மூலம் காய்கறிகள், பழங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் விற்பனை செய்யும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் நடமாடும் மளிகை மற்றும் காய்கறி கடைகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, கோடம்பாக்கம் மண்டலம், கே.கே.நகர், பி.டி. ராஜன் சாலையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நடமாடும் மளிகை மற்றும் காய்கறி விற்பனை அங்காடிகளை பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ், நேற்று தொடங்கி வைத்தார். இதையடுத்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் பொதுமக்களுக்கு எந்தவித இடையூறுமின்றி அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், பழங்கள் மற்றும் மளிகை பொருட்கள் பொதுமக்களின் குடியிருப்பு பகுதிகளுக்கே சென்று விற்பனை செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, 80 நடமாடும் கடைகள் கோடம்பாக்கம் மண்டலத்திலும், 450 நடமாடும் கடைகள் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மற்ற மண்டலங்களிலும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நடமாடும் கடைகள் மேலும் அதிகரிக்கப்படும்.

இந்த நடமாடும் மளிகை கடையில் 4 நபர்கள் கொண்ட குடும்பங்களுக்கு 15 நாட்களுக்கு தேவைப்படும் அரிசி, பருப்பு, எண்ணெய், மிளகாய் தூள், உப்பு மற்றும் இதர மளிகை பொருட்கள் அடங்கிய ‘காம்போ பேக்’ ரூ.850-க்கு கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வெளியில் செல்வதை தவிர்க்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் பிரதிநிதிகள், மேற்பார்வை பொறியாளர், மண்டல அலுவலர், செயற்பொறியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்