கோபி பகுதியில் வாழை இலை விலை கடும் வீழ்ச்சி
ஊரடங்கு உத்தரவு காரணமாக கோபி பகுதியில் வாழை இலை விலை கடும் வீழ்ச்சி அடைந்து உள்ளது.
கடத்தூர்,
விருந்தோம்பலுக்கு பெயர் பெற்றவர்கள் தமிழர்கள். அவ்வாறு விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற தமிழர்கள் தங்களுடைய வீட்டுக்கு விருந்தாளியாக யார் வந்தாலும் அவர்களுக்கு தலைவாழை இலை போட்டு உணவு படைப்பார்கள். இது காலந்தொட்டு பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது. தற்போது தலைவாழை விருந்தோம்பல் குறைந்துவிட்டது. எனினும் வாழை இலையில் விருந்தளிப்பது இன்னும் குறைந்தபாடில்லை. திருமணம், பூப்புனித நன்னீராட்டு விழா, கோவில் திருவிழாக்கள் உள்பட பல்வேறு விழாக்களில் வாழை இலையில் உணவு பரிமாறுவதை தமிழர்கள் பெருமையாக நினைக்கிறார்கள். மேலும் ஓட்டல்களில் வாழை இலையில் உணவு கொடுக்கப்படுகிறது.
அதனால் தமிழர்களின் வாழ்வியலில் வாழை இலைக்கு அவ்வளவு முக்கியத்துவம் உண்டு. அவ்வாறு முக்கியத்துவம் பெற்ற வாழை இலையை வாங்க தற்போது யாரும் இல்லை என்பது வேடிக்கையாக இருக்கிறதல்லவா? கொரோனாவின் தாக்கத்துக்கு வாழை இலை மட்டும் என்ன விதிவிலக்கா?
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள தடப்பள்ளி வாய்க்கால் பாசன பகுதிகளான எல்லமடை, தொட்டியபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 4 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக வாழை பயிரிடப்பட்டு உள்ளது. இங்கு வாழை இலை அறுக்க ஒரு ஏக்கருக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.15 ஆயிரம் என விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து மொத்த வியாபாரிகள் இங்கு வந்து வாழை இலைகளை அறுத்து செல்கின்றனர்.
இந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் அனைத்து கடைகளும் மூடப்பட்டு உள்ளன. ஒரு சில உணவகங்கள் மட்டும் உணவுகளை வழங்கி வருகிறது. அதுவும் பார்சலில் மட்டும் தான் உணவுகள் வழங்கப்படுகின்றன. போக்குவரத்தும் முற்றிலும் முடங்கிவிட்டது. சந்தைகள் செயல்படவில்லை. அதுமட்டுமின்றி திருமணம், கோவில் விழா உள்பட அனைத்து விழாக்களும் ரத்து செய்யப்பட்டு விட்டன. பொதுமக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கிறார்கள்.
விழாக்கள், ஓட்டல்கள், சந்தைகள் நடைபெறாததால் வாழை இலையின் பயன்பாடு குறைந்துவிட்டது. இதனால் கோபி பகுதியில் வாழை இலைகளை அறுக்க வியாபாரிகள் முன் வருவதில்லை.
இதுகுறித்து வாழை இலை வியாபாரி ஒருவர் கூறுகையில், ‘நாங்கள் மாதம் ஒன்றுக்கு ரூ.15 ஆயிரம் என விலை நிர்ணயித்து ஒப்பந்த அடிப்படையில் வாழை இலைகளை அறுத்து சென்று விற்பனை செய்தோம். ஆனால் கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைத்து விழாக்களும் ரத்து செய்யப்பட்டு விட்டன. ஓட்டல்களும் அடைக்கப்பட்டு விட்டன. இதனால் வாழை இலைகளின் பயன்பாடு முற்றிலும் குறைந்து விட்டது. ரூ.15 ஆயிரத்துக்கு ஒப்பந்தம் எடுத்ததால் அந்த பணத்தை விவசாயிகளிடம் நாங்கள் கொடுத்தாக வேண்டும். இதற்காக நாங்கள் வாழை இலைகளை அறுத்து விற்பனை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளோம். ஆனால் வாழை இலைகளை அறுக்க கூலி தொழிலாளர்கள் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் அறுத்த வாழை இலைகளை கொண்டு செல்ல சரக்கு வாகனங்கள் கிடைப்பதில்லை. அப்படியே சரக்கு வாகனங்கள் கிடைத்தாலும் அதை விற்பனை செய்ய சந்தைகள் இல்லை.
இதுபோன்ற காரணங்களால் நாங்கள் என்ன செய்வதென்றே கண் விழி பிதுங்கி நிற்கிறோம். ஊரடங்குக்கு முன்பு 130 இலைகள் கொண்ட கட்டு ஒன்று ரூ.400-க்கு விற்பனை ஆனது. ஆனால் தற்போது 130 இலைகள் கொண்ட கட்டு ஒன்று ரூ.100-க்கு விற்பனை ஆகிறது. அதுவும் சரியாக விற்பனை ஆகாமல் உள்ளது. வாழை இலைகளின் விலை வீழ்ச்சியால் எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது,’ என்றார்.