மீன்களின் விலை உயர்வால் ராமநாதபுரத்தில் கருவாடுக்கும் கிராக்கி
மீன்களின் விலை உயர்வால் ராமநாதபுரத்தில் தற்போது கருவாடுக்கும் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மீன்பிடி படகுகள் கடலுக்கு செல்லவில்லை. இதன் காரணமாக மீன் வரத்து வெகுவாக குறைந்து விட்டது.
ஒரு சில கடலோர கிராமங்களில் நாட்டுப்படகு மீனவர்கள் சிறிய வள்ளம், வத்தை போன்றவற்றின் மூலமாக கரைவலை மீன்பிடிப்பு மூலம் சின்னஞ்சிறிய மீன்களை பிடித்து வருகின்றனர். இவை மார்க்கெட்டுக்கு வந்த உடனேயே விற்று தீர்ந்து விடுகிறது. இதனால் மீன்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து விட்டது. கிலோ ரூ.50-க்கு விற்பனை செய்யப்பட்ட சூடை மீன்கள் தற்போது ரூ.300 வரை விலை உயர்ந்துள்ளது. இதையடுத்து மீன் பிரியர்கள் விலை உயர்வால் மீன்களை வாங்க முடியாமல் தவிக்கின்றனர்.
இந்த நிலையில் மீன்களுக்கு மாற்றாக அசைவ பிரியர்கள் கருவாடுகளை வாங்கிச்செல்கின்றனர். தடை உத்தரவு காரணமாக கருவாடுகளின் உற்பத்தியும் தடைபட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது கருவாடுகளின் விலையும் சற்று உயர்ந்துள்ளது.
ராமநாதபுரத்தில் கருவாடு விற்பனை செய்து வரும் சபீக் என்பவர் கூறியதாவது:- கருவாடு வகைகளான சீலா கிலோ ரூ.800-க்கும், நெத்திலி ரூ.300-க்கும், நகரை மற்றும் பன்னா கருவாடுகள் ரூ.200-க்கும், காரல் ரூ.100-க்கும் விற்கப்படுகிறது. மீன்களின் விலை உயர்வால் ஏராளமான பொதுமக்கள் தற்போது கருவாடுகளை வாங்கிச்செல்கின்றனர். இருப்பினும் கிராமப்புற மக்கள் மார்க்கெட்டுக்கு வராததால் கருவாடு விற்பனை 70 சதவீதம் குறைந்து விட்டது.
தற்போதுள்ள கருவாடு இன்னும் இருவாரங்களுக்கு போதுமானதாக இருக்கும். அதன் பிறகு இந்த கடைகளையும் மூடி விடுவோம். மீன்பிடி தொழில் ஆரம்பித்து மீண்டும் கருவாடு உற்பத்தி செய்யப்பட்டால் தான் மார்க்கெட்டுக்கு வரும். மீன் மற்றும் கருவாடு சார்ந்த தொழில்கள் அனைத்தும் தடை உத்தரவால் முடங்கிப்போய் அதனை நம்பியுள்ள தொழிலாளர்கள் வருவாய் இழப்பை சந்தித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.