தர்மபுரி மாவட்டத்தில் ஊரடங்கிலும் சேவையாற்றும் நம்ம ஊர் கதாநாயகர்கள்

கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளது. பொதுமக்கள் வீடுகளில் முடங்கியிருந்தாலும் அவர்களுடைய பல்வேறு அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய பல்வேறு துறையினர் அர்ப்பணிப்பு உணர்வுடன் களத்தில் பணியாற்றி வருகிறார்கள். தங்கள் பணி குறித்து அவர்கள் கூறியதாவது:-

Update: 2020-04-09 12:23 GMT
தர்மபுரி,
தர்மபுரியை சேர்ந்த ஆவின் பால் விற்பனையாளர் முனுசாமி:-

தர்மபுரி பிரதான ஆவின் விற்பனை நிலையத்தில் 24 மணி நேரமும் பால் விற்பனை செய்து வருகிறோம். 8 மணி நேர வேலை நிர்ணயப்படி சுழற்சி முறையில் பணிபுரிந்து வருகிறோம். பால் மிகவும் அத்தியாவசியமானதாக இருப்பதால் இங்கு தினமும் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் பால் வாங்க வருகிறார்கள். சமூக இடைவெளியை கடைபிடித்து பால் பாக்கெட்டுகளை வாங்கி செல்லுமாறு அறிவுறுத்துகிறோம். மாதாந்திர அட்டை வைத்திருப்பவர்களுக்கு வீடுகளுக்கே சென்று விற்பனை செய்கிறோம். அரசின் உத்தரவை மதித்து பொதுமக்கள் வீடுகளை விட்டு அடிக்கடி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். ஓரிரு நாட்களுக்கு தேவையான பாலை ஒரே நேரத்தில் வாங்கி செல்வது நல்லது.

தர்மபுரி நகராட்சி கமலா நேரு மருத்துவமனை செவிலியர் செல்வி:-

சேவை மனப்பான்மை அதிகம் தேவைப்படும் செவிலியர் பணி கொரோனா வைரஸ் தொற்று தடுப்பில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மருத்துவமனைக்கு வழக்கமான காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளுக்கு சிகிச்சை பெற தினமும் பலர் வருகிறார்கள். கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க தர்மபுரி பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களின் உடல் நிலையை டாக்டர்களுடன் இணைந்து தினமும் கண்காணிக்கிறோம். வழக்கமான தடுப்பூசி பணி, கர்ப்பிணிகளுக்கான மருத்துவ பரிசோதனைகளையும் செய்து வருகிறோம்.

தர்மபுரியை சேர்ந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார்:-

ஊரடங்கு உத்தரவு காரணமாக சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டத்தை காலை முதல் இரவு வரை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். கொளுத்தும் கோடை வெயிலிலும் சாலைகளில் இந்த பணி தொடர்கிறது. மக்களை பாதுகாப்பதற்காக நாங்கள் சாலையில் நிற்கிறோம். கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து பொதுமக்கள், இளைஞர்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதை முழுமையாக தவிர்க்க வேண்டும். இருசக்கர வாகனங்களை எடுத்து கொண்டு இளைஞர்கள் வீட்டை விட்டு வெளியே செல்வதை பெற்றோர் முழுமையாக தடுத்து நிறுத்த வேண்டும்.

தர்மபுரி நகராட்சி தூய்மை பணியாளர் மாதம்மா:-

தர்மபுரி நகராட்சி பகுதியில் உள்ள தெருக்கள், குடியிருப்பு பகுதிகள், சாலைகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி, தூய்மை பணி ஆகியவற்றை மேற்கொண்டு வருகிறோம். என்னை போன்ற தூய்மை பணியாளர்கள் கொரோனா அபாயத்தை தடுக்க முககவசங்கள், கையுறைகள் அணிந்தபடி தூய்மை பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். வழக்கமான காலத்தை விட இப்போது தூய்மை பணிக்கான தேவை அதிகரித்து உள்ளது. இந்த பணியை அர்ப்பணிப்புடன் செய்கிறோம். பொதுமக்கள் தேவையில்லாமல் வீடுகளில் இருந்து வெளியே வருவதை முழுமையாக தவிர்க்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்