கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற அரசு தீவிர முயற்சி - விவசாயத்துறை மந்திரி பி.சி.பட்டீல் பேச்சு
கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற அரசு தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக விவசாயத்துறை மந்திரி பி.சி.பட்டீல் கூறினார்.
விஜயாப்புரா,
விவசாயத்துறை சார்பில் மந்திரி பி.சி.பட்டீல் விஜயாப்புராவில் நேற்று விவசாயிகளுடன் கலந்துரையாடல் நடத்தினார். அதில் பி.சி.பட்டீல் பேசியதாவது:-
திராட்சையை ஆன்லைன் மூலமாக விற்பனை செய்ய எந்த தடையும் இல்லை. இதில் உள்ள இடையூறுகளை மாவட்ட கலெக்டர் சரிசெய்ய வேண்டும். விஜயாப்புரா மாவட்டத்தில் தர்ப்பூசணி அதிகமாக சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதை சாப்பிடுவதால் நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
இதுகுறித்து டாக்டர்கள் கூறியுள்ளனர். தர்ப்பூசணி சாப்பிட்டால் கொரோனா பரவும் என்று சில விஷமிகள் சமூக வலைத்தளத்தில் பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார்கள். அத்தகையவர்கள் மீது போலீசார் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டதால் தர்ப்பூசணி விற்பனையில் மந்தநிலை ஏற்பட்டுள்ளது. ஹாப்காம்ஸ் கடைகளில் தக்காளி, பழங்கள், காய்கறிகள் மற்றும் முட்டை விற்பனை செய்யப்படுகிறது. விவசாயிகள் யாரும் ஆதங்கப்படக்கூடாது. விவசாயிகள் யாரும் தற்கொலை செய்து கொள்ளும் முயற்சியில் ஈடுபடக்கூடாது.
தற்போதைய நெருக்கடியான நிலையை யாராவது தவறாக பயன்படுத்துவது குறித்து புகார் வந்தால் அத்தகையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
விவசாயிகளின் கஷ்டங்களை தீர்க்க அரசு தயாராக உள்ளது. கொரோனா தொல்லை விரைவில் குறையும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த நோயில் இருந்து மக்களை காப்பாற்ற அரசு அனைத்து தீவிரமான முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது. கூட்டுறவுத்துறை மந்திரி ரூ.1,200 கோடி நிதி ஒதுக்கி இருப்பதாக அறிவித்துள்ளார். இது விவசாயம் சார்ந்த கூட்டுறவுத்துறை நடவடிக்கைகளுக்கு உதவும்.
இவ்வாறு பி.சி.பட்டீல் பேசினார்.