செங்கோட்டை- கடையநல்லூர் நகராட்சியில் நடமாடும் காய்கறி விற்பனை தொடக்கம்

செங்கோட்டை, கடையநல்லூர் நகராட்சியில் நடமாடும் காய்கறி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

Update: 2020-04-07 22:30 GMT
செங்கோட்டை, 

கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு மட்டும் பொதுமக்கள் வெளியே வரவேண்டும். தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் என்று தென்காசி மாவட்டம் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் பொதுமக்கள் ஏராளமானோர் காய்கறிகள் வாங்க கடைகளில் கூடுவதால் சமூக இடைவெளி கடைபிடிப்பதில் பிரச்சினை ஏற்படுகிறது.

இதை தவிர்க்க செங்கோட்டையில் நடமாடும் காய்கறிக்கடை திட்டம் தொடங்கப்பட்டது. தாசில்தார் கங்கா தலைமையில் ஆணையாளர் கண்ணன் பொதுமக்களுக்கு காய்கறி விற்பனையை தொடங்கி வைத்தார். இதில் பொதுமக்கள் ஆர்வமாக காய்கறிகளை வாங்கி சென்றனர். நிகழ்ச்சியில் சுகாதார அலுவலர் வெங்கடேசன், சுகாதார ஆய்வாளர் மகேஷ்வரன், வருவாய் ஆய்வாளர் லட்சுமணன், வேளாண்மை உதவி அலுவலர் சேக்மைதீன், சுகாதாரப்பணிகள் மேற்பார்வையாளர் முத்துமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கடையநல்லூர்

இதேபோல் கடையநல்லூர் நகராட்சியில் நடமாடும் காய்கறி விற்பனை திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. 100 ரூபாய் தொகுப்பு அடங்கிய காய்கறி விற்பனையை, ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கடையநல்லூர் தாசில்தார் அழகப்ப ராஜா, நகரமைப்பு அலுவலர் காஜாமைதீன், நகரமைப்பு ஆய்வாளர் கிருஷ்ணகுமார், சுகாதார அலுவலர் நாராயணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அதுபோன்று அம்மா உணவகத்தில் இரவு நேர உணவு திட்டத்தையும் நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான பொதுமக்கள் அம்மா உணவகத்தில் இரவு உணவு சாப்பிட்டுச் சென்றனர்.

மேலும் செய்திகள்