நிவாரண தொகைபெற திரண்டனர் வங்கிகளில் சமூக விலகலை கடைபிடிக்காத பொதுமக்கள் - போலீஸ் எச்சரிக்கை
கொரோனா நிவாரண தொகை பெற வங்கி முன் சமூக விலகலை கடைபிடிக்காமல் பொதுமக்கள் திரண்டனர். அவர்களை போலீசார் எச்சரித்தனர்.
பாகூர்,
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி அரசு சார்பில் புதுவை முழுவதும் கொரோனா நிவாரண தொகையாக குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் அவரவர் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டது. இந்த தொகையை வாங்குவதற்காக நேற்று (திங்கட்கிழமை) பாகூர் பகுதியில் உள்ள 3 வங்கிகளின் முன் காலை 8 மணிக்கே பொதுமக்கள் குவிந்தனர். சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டமாக அப்பகுதியில் திரண்டனர். முக கவசங்களை அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு வரிசையில் நின்றனர்.
இதுபற்றி தகவலறிந்த பாகூர் போலீசார் அங்கு வந்து வங்கி முன்பு கூட்டமாக இருந்த ஒவ்வொருவரையும் ஒரு மீட்டர் இடைவெளியில் வரிசையில் நிற்க வைத்தனர். போலீசார் அவர்களிடம் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும், வெளியே வரும்பொழுது முக கவசம் அணிந்து வரவேண்டும் என்றும் அறிவுரை கூறினார் கள்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், தமிழகத்தில் ரேஷன்கார்டுதாரர்களுக்கு நிவாரண தொகையுடன் பருப்பு, சர்க்கரை, அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட் களை வீட்டுக்கே சென்று வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதுபோல் புதுவையிலும் வீடுகளுக்கே சென்று அரிசி, பருப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.