கொரோனா நிவாரண உதவியாக இதுவரை மத்திய அரசு நிதி தரவில்லை - நாராயணசாமி பேட்டி

கொரோனா நிவாரண உதவியாக இதுவரை மத்திய அரசு நிதி தரவில்லை என நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று இரவு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

Update: 2020-04-06 05:18 GMT
புதுச்சேரி, 

கொரோனா பாதுகாப்பு தொடர்பாக மத்திய அரசின் அறிவுரைகளை மாநில அரசு பின்பற்றி வருகிறது. அதனையும் மீறி மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஊரடங்கு உத்தரவு தேவைதான். இதன் மூலம் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் கை தட்டுதல், விளக்கு ஏற்றுவதால் மட்டும் கொரோனா போய்விடாது.

நாட்டிற்கு தேவையான மருத்துவ உபகரணங்களை மத்திய அரசு தான் கொடுக்க வேண்டும். மாநில அரசிடம் நிதி இல்லை. புதுச்சேரி மாநிலத்திற்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.995 கோடி நிதி கேட்டிருந்தேன். மத்திய அரசிடமிருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை. புதுச்சேரி மக்களுக்கு மாநில அரசு நிதியில் இருந்து ரூ.2 ஆயிரம் கொடுத்துள்ளோம். நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டியது பிரதமரின் கடமை.

மத்திய அரசு, மாநில அரசிற்கு உதவ வேண்டும். கொரோனா வைரசால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். வருகிற 14-ந் தேதிக்கு பிறகு பொருளாதாரத்தை மேம்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போதே திட்டமிட வேண்டும். 11 லட்சம் கோடி பணத்தை மக்களுக்கு கொடுத்து நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். பிரதமர் பொருளாதார நிபுணர்களை அழைத்து ஆலோசனை நடத்த வேண்டும். அதன்படி நாட்டு மக்களுக்கு தேவையான அத்தியாவசியம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக பிரதமருக்கு விரிவாக கடிதம் எழுதி உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்