இறப்பு, திருமணத்திற்கு செல்ல தென்காசி மாவட்டத்தில்இணையதளத்தில் பயண அனுமதிசீட்டு வழங்கப்படும் - கலெக்டர் தகவல்
தென்காசி மாவட்டத்தில் இறப்பு, திருமணத்திற்கு செல்ல இணையதளத்தில் பயண அனுமதிசீட்டு வழங்கப்படும் என்று கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் கூறினார். தென்காசி மாவட்ட கலெக்டர் அருண்சுந்தர் தயாளன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
தென்காசி,
கொரொனா வைரஸ் நோய் தொற்று பரவுவதை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்திலும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லவும், பொதுமக்கள் திருமணம், இறப்பு மற்றும் மருத்துவ காரணங்களுக்காக வெளியூர் பயணம் செல்வதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது.
இதை சரி செய்வதற்காகவும், இதற்கு அனுமதி வழங்குவதற்காகவும், இணையதள பயண அனுமதி சீட்டு வசதியை மாவட்ட நிர்வாகம் செய்து உள்ளது. 8099914914 என்ற தொலைபேசி எண்ணுக்கு மிஸ்டுகால் கொடுத்தால் உங்கள் செல்போனுக்கு ஒரு இணையதள முகவரி குறுஞ்செய்தி தகவல் வரும்.
அந்த இணையதள முகவரியில் தங்களுடைய செல்போன் எண்ணை பதிவு செய்தால் மீண்டும் ஒரு குறுஞ்செய்தி வரும். அந்த குறுஞ்செய்தியை பதிந்து தங்களுடைய பணம் குறித்த விவரங்களை பூர்த்தி செய்யவேண்டும். அதன் பிறகு தங்களது விண்ணப்பம் பரீசிலிக்கப்பட்டு இணையதளம் மூலம் பயண அனுமதி சீட்டு வழங்கப்படும். மேலும் பயண சீட்டிற்கான அனுமதி குறித்த தகவல் உங்கள் செல்போனுக்கு குறுஞ்செய்தியாக வரும். அதில் அனுமதி சீட்டு செல்லத்தக்க காலம், நேரம், பயண விவரம், வாகன எண் உள்ளிட்ட விவரங்கள் குறிப்பிடப்பட்டு இருக்கும்.
இந்த அனுமதி சீட்டை சோதனை சாவடிகளில் போலீசார் சோதனை செய்யும் போது காண்பிக்கவேண்டும். இது வணிகர்கள் சரக்குகளை எடுத்து வருவதற்கும், பொதுமக்களின் அவசர பயணத்திற்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இணையதளம் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் தொடர்புடைய அலுவலர்கள், போலீசார் மற்றும் வருவாய்த்துறை மூலம் சரிபார்க்கப்பட்ட பின்னரே மின் அனுமதி சீட்டு வழங்க இயலும். எனவே 72 மணி நேரத்திற்கு முன்னரே விண்ணப்பிக்கவேண்டும். தவறான காரணங்களை தெரிவித்து பயணசீட்டு பெற முயற்சி செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட தாசில்தார்களை அணுகவும், இந்த பயண அனுமதி சீட்டு பெறும் நடைமுறை நேற்று தொடங்கி உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.