பிற துறைகளின் வாகனங்களை சுகாதாரத்துறைக்கு வழங்க வேண்டும் - துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி வேண்டுகோள்
கொரோனாவை தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரத்துறைக்கு பிற துறைகளின் வாகனங்களை வழங்க வேண்டும் என்று துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக துணை முதல்-மந்திரி (போக்குவரத்து) லட்சுமண் சவதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்கும் பணியில் அரசு துறை அதிகாரிகள் குறிப்பாக சுகாதாரத்துறை மற்றும் போலீஸ் துறை அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு வாகன பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அறிகிறேன். அதனால் பிற துறைகளை சேர்ந்த அதிகாரிகள் தங்களின் வாகனங்களை சுகாதாரம் மற்றும் போலீஸ் துறைக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அத்தகைய வாகனங்களை பெறும் பணியை போக்குவரத்து துறையில் பணியாற்றி வரும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மேற்கொண்டுள்ளனர். ஆனால் சில வாகன ஓட்டுனர்கள், கொரோனா பயத்தால் சுகாதார சேவையில் ஈடுபட தயங்குவதாக தகவல்கள் வந்துள்ளன.
பாதுகாப்பு வசதிகள்
ஓட்டுனர்களுக்கு அனைத்து விதமான முன்எச்சரிக்கை பாதுகாப்பு வசதிகளும் செய்து கொடுக்கப்படுகின்றன. அதனால் ஓட்டுனர்கள் பயப்பட தேவை இல்லை. தேவையான மருத்துவ வசதிகளும் செய்து கொடுக்கப்படுகின்றன. எனவே பிற துறைகளின் அதிகாரிகள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் இந்த நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு லட்சுமண் சவதி தெரிவித்துள்ளார்.