கொரோனா பிரச்சினையில் அகல் விளக்கு ஏற்றச்சொல்வது சிறுபிள்ளைத்தனமானது - காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கண்டனம்
கொரோனா பிரச்சினையில் மக்களை அகல் விளக்கு ஏற்ற சொல்லிய பிரதமர் மோடிக்கு காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, இது சிறுபிள்ளைத்தனமானது என விமர்சித்து உள்ளன.
மும்பை,
கொரோனா வைரசை தோற்கடிக்க நாட்டு மக்கள் தங்களது ஒட்டுமொத்த உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் பொதுமக்கள் தங்களது வீடுகளில் மின்விளக்குகளை அணைத்து விட்டு அகல் விளக்ககேற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி தனது வீடியோ பேச்சில் கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கு மராட்டியத்தை சேர்ந்த காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.
இதுகுறித்து மாநில காங்கிரஸ் தலைவரும், வருவாய் துறை மந்திரியுமான பாலசாகேப் தோராட் கூறுகையில், “கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதில் பிரதமர் மோடி தீவிர கவனம் செலுத்தி கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். அதை விட்டு விட்டு நிகழ்ச்சியை உருவாக்குவது கண்டிக்கத்தக்கது.
கைதட்ட சொல்வது, விளக்கு ஏற்றச் சொல்வது தான் பிரதமரின் வேலையா?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
தேசியவாத காங்கிரசை சேர்ந்த வீட்டு வசதித்துறை மந்திரி ஜிதேந்திர அவாத் வெளியிட்டு உள்ள வீடியோ பதிவில், “கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு உதவுவது பற்றி பிரதமர் பேசுவார் என்று நினைத்து இருந்தோம்.
ஆனால் அகல் விளக்கு ஏற்றுங்கள் என்று கூறி இருப்பது முட்டாள் தனமானது, சிறுபிள்ளைத்தனமானது. மோடி கூறியது போல யாரும் விளக்கேற்ற வேண்டாம்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.