திருச்சியில், கொரோனாவால் பாதித்தவர்களின் குடியிருப்பு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு

திருச்சியில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் வசித்த குடியிருப்பு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-04-02 22:30 GMT
கொள்ளிடம் டோல்கேட், 

டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் திருச்சி நெ.1 டோல்கேட் அருகே உள்ள தாளக்குடி மருதமுத்து நகரை சேர்ந்த ஒரு முதியவர் மற்றும் 2 வாலிபர்களுக்கு அன்பில் பகுதியை சேர்ந்த ஒருவரும் கலந்து கொண்டனர். இந்தநிலையில் அவர்கள் 4 பேரையும் நேற்று முன்தினம் சுகாதாரத்துறையினர் கண்டறிந்தனர். பின்னர் 4 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்நிலையில் கொரோனா தொற்று அறிகுறி உள்ள அவர்கள் 4 பேரும் வசித்த பகுதியை நேற்று மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு நேரில் ஆய்வு செய்தார்.

இதைத்தொடர்ந்து சுகாதாரத்துறை பணியாளர்கள் அப்பகுதியில் வசிக்கும் மக்களிடம், சளி, இருமல், தலைவலி உள்ளிட்ட உபாதைகள் ஏதேனும் இருக்கிறதா? என்று கேட்டறிந்ததுடன் அங்கு குடியிருந்து வருபவர்களின் விவரங்கள் குறித்த கணக்கெடுப்பில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து தாளக்குடி பகுதியில் உள்ள மருதமுத்து நகர், கூத்தூரில் உள்ள எஸ்.எஸ்.நகர் மற்றும் குடித்தெரு ஆகியவை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பகுதிகளுக்கு புதிதாக யாரும் உள்ளே செல்லாதவாறும், உள்ளே இருப்பவர்கள் யாரும் வெளியே வராத வண்ணம் தடுப்பு அமைத்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

தடை செய்யப்பட்ட இந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் உள்ளாட்சி நிர்வாகம் மூலம் வினியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்