ஈரோடு மாநகரப்பகுதியில் வாகனங்கள் செல்ல தடை; மேட்டூர் ரோடு முற்றிலும் மூடப்பட்டது
ஈரோடு மாநகர் பகுதியில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேட்டூர் ரோடு முற்றிலும் மூடப்பட்டது.
ஈரோடு,
கொரோனா தொற்று காரணமாக ஈரோடு மாவட்டம் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளில் சுமார் 70 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். ஆனாலும், அன்றாடம் பலரும் தங்கள் வாகனங்களில் வீதிகளில் பயணம் செய்து வருகிறார்கள். இவர்கள் ஒவ்வொருவராக விசாரித்து விசாரித்து போலீசாரும் களைத்துப்போகிறார்கள்.
இந்தநிலையில் ஈரோடு மாநகரத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு சாலைகள் அடைக்கப்பட்டு உள்ளன. அத்தியாவசிய தேவைகளுக்காக செல்லும் வாகனங்கள் மட்டும் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சுவஸ்திக் கார்னர், ஈரோடு அரசு ஆஸ்பத்திரி ரவுண்டானா பகுதிகளில் இருந்து பஸ் நிலையத்துக்கு வரும் மேட்டூர் ரோடு முற்றிலும் அடைக்கப்பட்டு உள்ளது.
இதுபோல் நசியனூர் ரோட்டில் இருந்து கலெக்டர் அலுவலகம் செல்லும் சம்பத்நகர் ரோடு மூடப்பட்டு இருக்கிறது. பெருந்துறை ரோட்டில் இருந்தும் சம்பத்நகருக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள், அந்த குடியிருப்பில் உள்ள அரசுத்துறை அதிகாரிகள் செல்வதற்காக மட்டுமே அங்கு அனுமதி உள்ளது. பெருந்துறை ரோடு வீரப்பம்பாளையம் பிரிவு, ஆசிரியர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து தடை ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதுபோல் மாநகரில் பல்வேறு பகுதிகளில் போலீசார் வாகனங்கள் செல்வதை தடை விதித்து தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து உள்ளனர். எனவே தகுந்த அத்தியாவசிய காரணங்கள் ஏதுமின்றி பொதுமக்கள் வெளியே செல்ல வேண்டாம் என்று போலீசார் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
தற்போது மேம்பாலம் வழியாக பயணம் செய்யலாம். மேலும் சில ரோடுகள் பொதுமக்கள் அத்தியாவசிய பயன்பாட்டுக்காக உள்ளது. பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவை மதித்து நடக்காமல் தொடர்ந்து வீதிகளில் சுற்றிக்கொண்டு இருந்தால் அனைத்து பகுதிகளும் காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு யாரும் சாலைகளில் செல்ல முடியாத நிலை வரும் வாய்ப்பு உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே பொதுமக்கள் மிக அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் வெளியில் வரவேண்டும். கொரோனா வைரஸ் பரவலில் இருந்து ஒவ்வொருவரும் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
இதேபோல் பெருந்துறையில் உள்ள குன்னத்தூர் நால் ரோடு சந்திப்பு, பவானி ரோடு சந்திப்பு, ஈரோடு ரோடு சந்திப்பு, சென்னிமலை ரோடு சந்திப்பு, பஸ் நிலையம் ரோடு சந்திப்பு, அரசு மருத்துவமனை சந்திப்பு ஆகிய 6 இடங்களில் போலீசார் தடுப்புகள் வைத்து வாகனங்கள் செல்ல தடை ஏற்படுத்தி உள்ளனர்.
இதனால் பெருந்துறையில் வாகன போக்குவரத்து நேற்று குறைந்து காணப்பட்டது.