வீடு தேடிச்சென்று நிவாரண தொகை - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு
அரசு வழங்கும் நிவாரண தொகையை வீடு தேடிச்சென்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார்.
வத்திராயிருப்பு,
கொரோனா தடுப்பு முன் எச்சரிக்கை பணி குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆலோசனை நடத்தினார். அப்போது அரசு வழங்கும் ரூ.1000 மற்றும் அத்தியாவசிய பொருட்களை வீடு தேடிச்சென்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
மாவட்டத்தில் நடந்து வரும் கொரோனா தடுப்பு முன் எச்சரிக்கை பணிகளை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முடுக்கி விட்டுள்ளார். தாலுகா வாரியாக அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இதன்படி வத்திராயிருப்பில் அவர் ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில் கலெக்டர் கண்ணன், எம்.எல்.ஏ.க்கள் சந்திரபிரபா, ராஜவர்மன், போலீஸ் சூப்பிரண்டு பெருமாள், வத்திராயிருப்பு ஒன்றிய தலைவர் சிந்து முருகன், துணைத்தலைவர் ரேகா வைரகுட்டி, திட்ட இயக்குனர் சுரேஷ், தாசில்தார் ராம்தாஸ், மாவட்ட ஊராட்சி தலைவர் வசந்தி மான்ராஜன், சிவகாசி சுகாதார மாவட்ட துணை இயக்குனர் ராம்கணேஷ், தீயணைப்பு அதிகாரி சந்திரபோஸ், வட்டார மருத்துவ அலுவலர் ஜெயராமன், வத்திராயிருப்பு தலைமை மருத்துவர் ராஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகேஸ்வரன், நாகராஜ், பேரூராட்சி செயல் அலுவலர்கள் கண்ணன், சந்திரகலா, சிவ அருணாச்சலம், மோகன் கென்னடி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதேபோல சாத்தூரிலும் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். நகராட்சி அலுவலகத்தில் நடந்த இந்த கூட்டத்தில் கலெக்டர் கண்ணன், ராஜவர்மன் எம்.எல்.ஏ., போலீஸ் சூப்பிரண்டு பெருமாள், திட்ட இயக்குனர் சுரேஷ், கோட்டாட்சியர் காசிசெல்வி, தாசில்தார் ராமசுப்பிரமணியன், சாத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணன், சாத்தூர் நகராட்சி கமிஷனர் ராஜமாணிக்கம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாகுலன், காஜா மைதீன் பந்தே நவாஷ், மாநில பேரவை துணைச் செயலாளர் சேதுராமானுஜம், அ.தி.மு.க. நகர செயலாளர் வாசன், ஒன்றிய செயலாளர்கள் சண்முகக்கனி, தேவதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டங்களில் அவர் பேசுகையில் கூறியதாவது:-
குடும்ப அட்டைதாரர்கள் 5,66,876 பேருக்கு தலா 1000 ரூபாய் நிவாரண தொகையும் அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்படஉள்ளது. பொதுமக்கள் அதிகமாக கூடுவதை தவிர்க்கும் பொருட்டு நியாய விலைக்கடையில் ஒரு நாளைக்கு 100 குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, அவரவர்களுக்கு குறிப்பிட்ட அந்த நேரத்தில் வந்து பொருட்களையும் ரூ.1000 பெற்று கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் அவரவர் வீடுகளுக்கே நேரில் சென்று அரசு அறிவித்துள்ள நிவாரணத்தொகை மற்றும் அத்தியாவசியப்பொருட்களை வழங்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு பேசினார்.