டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பியவர்கள்: குற்றாலத்தில் 8 பேரை தனிமைப்படுத்த தூய்மை பணியாளர்கள் எதிர்ப்பு

டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பிய 8 பேரை குற்றாலம் விடுதியில் தனிமைப்படுத்த தூய்மை பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Update: 2020-04-01 22:45 GMT
தென்காசி, 

டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். அவர்களை கணக்கெடுத்து கொரோனா பாதிப்பு உள்ளதா? என்பது குறித்து பரிசோதிக்க சுகாதாரத்துறையினர் முடிவு செய்தனர். அதன்படி தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 8 பேரை அழைத்து வந்து மேலகரத்தில் தனிமைப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் 8 பேரும் குற்றாலத்தில் உள்ள நகர பஞ்சாயத்துக்கு சொந்தமான ஒரு தங்கும் விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டு தங்க வைக்கப்பட்டனர். இந்த இடத்திற்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

இந்த தங்கும் விடுதியின் அருகே தூய்மை பணியாளர்களின் குடியிருப்பு உள்ளது. இதனால் இங்கு நோய் பரவும் என்ற அச்சம் ஏற்பட்டது. இதனால் நேற்று காலை குற்றாலம் நகர பஞ்சாயத்து அலுவலகத்திற்கு தூய்மை பணியாளர்கள் வந்தனர். குற்றாலத்தில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள 8 பேரையும் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று கூறி எதிர்ப்பு தெரிவித்து பணிக்கு செல்லாமல் இருந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட நகர பஞ்சாயத்துகளின் உதவி இயக்குனர் குத்தாலிங்கம், குற்றாலம் நகர பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி வீரபாண்டியன், சுகாதார அலுவலர் ராஜகணபதி மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். அதன்பிறகு தூய்மை பணியாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் தனிமைப்படுத்தப்பட்ட 8 பேரும் தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டனர். அங்குள்ள தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். 8 பேரின் சளி, ரத்த மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அதன் முடிவு வந்த பின்னரே அவர்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா? என்பது குறித்து தெரியவரும். இதனால் தென்காசி மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்