நிவாரண பொருட்கள் வாங்குவதற்காக ரேஷன் அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது

நெல்லை மாவட்டத்தில் நிவாரண பொருட்கள் வாங்குவதற்காக ரேஷன் அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கும் பணி நேற்று தொடங்கியது.

Update: 2020-04-01 22:15 GMT
நெல்லை, 

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கிறார்கள்.

அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 நிவாரண உதவியாக வழங்கப்படுகிறது. மேலும் ஏப்ரல் மாதத்துக்கான அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, கோதுமை, சமையல் எண்ணெய் ஆகியவையும் இலவசமாக வழங்கப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

அதன்படி நெல்லை மாவட்டத்தில் நிவாரண தொகை, பொருட்கள் இன்று (வியாழக்கிழமை) முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிறது. அதற்கான டோக்கன் நேற்று காலை முதல் வினியோகம் செய்யப்பட்டது.

ஒவ்வொரு ரேஷன் கடைகளுக்கு முன்பும் சமூக இடைவெளி வட்டம் போடப்பட்டு இருந்தது. அந்த வட்டத்துக்குள் நின்று பொதுமக்கள் டோக்கன் வாங்கிச் சென்றனர்.

பல கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. சில இடங்களில் உள்ள ரேஷன் கடைகள் திறக்கவில்லை. அங்கு பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்து இருந்தனர். ஒவ்வொரு டோக்கனிலும் தேதி, நேரம் குறிப்பிடப்பட்டு இருந்தது. கொரோனா வைரஸ் காரணமாக மேலப்பாளையம் முடக்கப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள ரேஷன் கடைகள் திறக்கவில்லை.

இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, நெல்லை மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் டோக்கன் வழங்கும் பணி தொடங்கி உள்ளது. கடைகளில் உள்ள ரேஷன்கார்டை பொருத்து தேதி, நேரம் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஒரு நாளைக்கு 100 பேருக்கு மட்டும் தான் நிவாரண பொருட்கள் வழங்கப்படும். அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் நிவாரண பொருட்கள் வழங்கப்படும் என்றார்.

மேலும் செய்திகள்