பெருந்துறையில் பணம், பொருட்கள் பெற ரேஷன் கடைகளில் டோக்கன் வினியோகம்: பொதுமக்கள் நெருக்கியடித்துக்கொண்டதால் பரபரப்பு

பெருந்துறையில் பணம், பொருட்கள் பெற ரேஷன் கடைகளில் டோக்கன் வினியோகிக்கப்பட்டது. டோக்கனை வாங்க பொதுமக்கள் நெருக்கியடித்துக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-04-01 21:00 GMT
பெருந்துறை, 

பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் பொறுப்பில் பெருந்துறை ராஜ வீதியில் 2 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த 2 கடைகளில், ரேஷன் பொருட்கள் வாங்க 3 ஆயிரம் ரேஷன் அட்டைகள் உள்ளன. கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பொதுமக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளே முடங்கியுள்ளனர். எனவே அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.1000, அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு, சமையல் எண்ணெய் போன்ற ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்த பணம், பொருட்களை ரேஷன்கார்டுதாரர்கள் பெற ரேஷன் கடை ஊழியர்களே வீடுகளுக்கு நேரில் சென்று டோக்கனை முதலில் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில் பெருந்துறை ராஜவீதியில் நேற்று 2 ரேஷன் கடைகள் திறக்கப்பட்டன. பின்னர் கடை விற்பனையாளர்கள் அங்கேயே வைத்து ரேஷன் கார்டுதாரர்களை வரவழைத்து டோக்கன்களை வினியோகம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த தகவல் அந்த பகுதியில் காட்டுத்தீபோல் பரவியது. இதனால் சுமார் ஒரு மணி நேரத்தில் நூற்றுக்கணக்கான ரேஷன் கார்டுதாரர்கள் அங்கு வந்தனர்.

கொரோனா வைரஸ் தொற்று பற்றிய விழிப்புணர்வு இல்லாமல், டோக்கன் வாங்க பொதுமக்கள் நெருக்கியடித்துக்கொண்டு ராஜ வீதி முழுவதும் திரண்டு நின்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் பெருந்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் அங்கு விரைந்தனர். பின்னர் நெருக்கியடித்து கொண்டிருந்த பொதுமக்களை அங்கிருந்து விரட்டியடித்தனர்.

தொடர்ந்து, அந்த ரேஷன் கடை ஊழியர்களை எச்சரித்து, உடனடியாக கடைகளை மூட உத்தரவிட்டனர். இதையடுத்து, அக்கடைகளின் விற்பனையாளர்கள் 2 கடைகளையும் மூடினர். அவர்கள் போலீசாரிடம் கூறும்போது, ‘இனி டோக்கன்களை ரேஷன் கார்டுதாரர்களின் வீடுகளுக்கே தேடிச்சென்று கொடுக்கிறோம்’ என்று உறுதி அளித்துவிட்டு அங்கிருந்து சென்றனர்.

மேலும் செய்திகள்