திருச்சி அரசு மருத்துவமனையில், கொரோனா வைரஸ் அறிகுறியுடன் ஒரே நாளில் 20 பேர் அனுமதி
திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் ஒரே நாளில் 20 பேர் அனுமதிக்கப்பட்டனர்.
திருச்சி,
கொரோனா வைரஸ் அறிகுறியுடன் வருபவர்களுக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் தனி வார்டு அமைக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. திருச்சி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்ட கொரோனா வார்டில் ஏற்கனவே அறிகுறியுடன் 8 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த நிலையில் நேற்று ஒரேநாளில் புதிதாக மேலும் 20 பேர் கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சைக்கு பிறகு குணமடைபவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே துபாயில் இருந்து கடந்த 22-ந் தேதி அதிகாலை விமானம் மூலம் திருச்சி வந்த பயணிகளை விமானநிலையத்தில் மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்தனர். அப்போது ஈரோட்டை சேர்ந்த 24 வயது வாலிபருக்கு சளி, இருமல், காய்ச்சல் போன்ற கொரோனா அறிகுறி இருந்தது. இதையடுத்து அந்த வாலிபரை ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்ட தனி வார்டில் சேர்த்தனர். அங்கு வாலிபரின் ரத்த மாதிரி, சளி ஆகியவற்றை பரிசோதித்த போது கொரோனா வைரஸ் தொற்று இருந்தது உறுதியானது. உடனே அவர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டார். ஆனால் அவரது உடல்நிலை சீராக இருந்ததால் நேற்று 2-ம் பரிசோதனை மேற்கொண்டனர். ஆனால் அதிலும் கொரோனா வைரஸ் தொற்று இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவருக்கு நாளை மறுநாள் (வெள்ளிக் கிழமை) 3-ம் கட்ட பரி சோதனை மேற்கொள்ள இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.