அறுவடையாகாமல் வீணாய் போகும் வாழை, மல்லிகை, மிளகாய் பயிர்கள்
வாழை, மல்லிகைப்பூ, மிளகாய் பயிர்கள் அறுவடையாகாமல் வீணாகி போவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
திருப்பரங்குன்றம்,
மதுரை மாவட்டத்திலும், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களிலும் பெரும்பாலான பகுதி கிராமங்களை கொண்டதாகும். அதில் பெரும்பாலானோர் விவசாயத்தையே நம்பி பிழைப்பு நடத்தி வருகின்றனர். கிணற்றுநீர் பாசனமாக ஏராளமான விவசாயிகள் தங்களது தோட்டங்களில் மல்லிகைப்பூ விவசாயம் செய்து வருகின்றனர்.
ஆனால் ஊரடங்கு உத்தரவால் மல்லிகைப்பூக்களை பூ மார்க்கெட்டிற்கு கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். கடந்த 5 நாட்களாக பூ பறிப்பதை விட்டுவிட்டனர். இதனால் செடியிலே பூ மலர்ந்து உதிரும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் மதுரை நிலையூர், நாகமலைபுதுக்கோட்டை, புதுக்குளம், வடிவேல்கரை, விளாச்சேரி, கிளாநேரி உள்ளிட்ட பல்வேறு ஊராட்சி பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் ஏராளமான விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ளனர். விவசாயிகள் தங்களது கிணற்றில் இருந்து தோட்டத்திற்கு இரவு, பகலாக தண்ணீர் பாய்ச்சி வாழையை தங்களது கண்கள் போல பாதுகாத்து வருகின்றனர்.
இந்த நிலையில் அவர்கள் ஊரடங்கு உத்தரவால் தங்களது தோட்டங்களில் இருந்து வாழை இலை, வாழைக்காயை மதுரை சென்டிரல் மார்க்கெட்டிற்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஓட்டல், சிற்றுண்டிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் வாழை இலை விற்பனை முழுமையாக இல்லை. இதனால் வாழை இலை அறுப்பது, வாழைக்காய் அறுவடை பணிகள் எதுவும் நடக்கவில்லை. இதன் காரணமாக விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தோட்டங்களிலும், வயல் களிலும் அதிக அளவில் மிளகாய் சாகுபடி நடக்கிறது. இருந்தாலும் பச்சை மிளகாய் சரிவர அறுவடை ஆகாமலும், அறுவடையான மிளகாய்கள் மார்க்கெட்டுக்கு போகாத நிலையும் உள்ளது.
பச்சை மிளகாய் பறிப்பது நிறுத்தப்பட்டுள்ளதால் அவை பழமாக பழுத்து வத்தலாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே விவசாயமும், விவசாயிகளின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகும் நிலை உள்ளதால் தமிழக அரசு உரிய இழப்பீடு தர வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.