கோவை சிங்காநல்லூரில் சாலையில் மயங்கிய கர்ப்பிணிக்கு போலீசார் உதவி - ஆம்புலன்சில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்
கோவை சிங்காநல்லூரில் சாலையில் மயங்கிய கர்ப்பிணிக்கு போலீசார் உதவி செய்து ஆம்புலன்சில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
கோவை,
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் பொதுமக்களும் வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் கோவை சிங்காநல்லூர் அருகே ஒரு தம்பதி நடந்து சென்றனர். அந்த பெண் கர்ப்பமாக இருந்தார். அப்போது அந்த பெண் திடீரென்று மயங்கினார்.
இதனால் செய்வது அறியாமல் அந்த பெண்ணின் கணவர் திகைத்தார். அதைபார்த்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஓடிச்சென்று அந்த பெண்ணுக்கு முதலுதவி செய்து மயக்கத்தை தெளிய வைத்தனர்.விசாரணையில் அவர்கள் ஈரோடு மாவட்டம் கொடுமுடியை சேர்ந்த விக்னேஷ்வரன் (வயது 30), அவருடைய மனைவி மஞ்சுளா (25) என்பதும், அவர் 8 மாத கர்ப்பிணி என்பதும் தெரியவந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வந்ததும், தற்போது அங்கு கூட்டம் அதிகமாக இருப்பதால், தங்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கிவிடுமோ என்ற அச்சத்தில் வீட்டிற்கு நடந்து செல்வதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஒரு ஆம்புலன்சை வரவழைத்தனர். பின்னர் அந்த தம்பதியை அதில் ஏற்றி சொந்த ஊருக்கு அனுப்பி வைத்்தனர். மேலும் இதுபோன்று நடந்து வெளியே செல்லக்கூடாது என்று அறிவுரையும் வழங்கினார்கள்.