வெளிமாநிலத்தில் இருந்து கடல் வழியாக குமரிக்கு வந்த மீனவர்கள் தடுத்து நிறுத்தம் - தெர்மல் ஸ்கேனர் பரிசோதனைக்கு பிறகு அனுமதி
வெளிமாநிலத்தில் இருந்து கடல் வழியாக குமரிக்கு வந்த மீனவர்களை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். தெர்மல் ஸ்கேனர் பரிசோதனைக்கு பிறகே அவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
கன்னியாகுமரி,
குமரி மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் ஆயிரக்கணக்கானோர் வெளிநாடு, வெளிமாநிலங்களில் தங்கி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். தற்போது ஆட்கொல்லி நோயான கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மீன்சந்தைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடிக்கும் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்கு செல்லாமல் முடங்கினர்.
எனவே, வெளி மாநிலங்களில் உள்ள குமரி மீனவர்கள் வேறு வழியில்லாமல் சொந்த ஊருக்கு திரும்ப முடிவு செய்தனர். ஆனால் பஸ், ரெயில் போக்குவரத்து இல்லாததால் கடல் வழியாக படகு மூலம் குமரிக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில நாட்களாக குளச்சல் துறைமுகம், முட்டம் துறைமுகம், தேங்காப்பட்டணம் பகுதிகளுக்கு வந்த மீனவர்களை உடனே இறங்க அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. கொரோனா அறிகுறி ஏதேனும் இருக்கிறதா? என்பதை பரிசோதித்த பிறகு அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று கர்நாடகாவில் இருந்து 24 மீனவர்கள் சின்னமுட்டம் துறைமுகத்துக்கு விசைப்படகுகளில் வந்தனர். இவர்கள் குமரி மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த மீனவர்கள். இதனை அறிந்த சின்னமுட்டம் மீன்துறை உதவி இயக்குனர் ராஜதுரை மற்றும் ஊழியர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர். காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என்ற சோதனை நடத்தப்பட்ட பிறகே நீங்கள் படகில் இருந்து இறங்க வேண்டும் என அவர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.
உடனே மீனவர்கள், தேங்காப்பட்டணம் துறைமுகத்துக்கு வந்த போது, அங்குள்ள அதிகாரிகள் எங்களை பரிசோதனை செய்தார்கள் என்றனர். அதற்கு மீன்வளத்துறை அதிகாரிகள் உடன்படவில்லை. பின்னர் சுகாதாரத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அகஸ்தீஸ்வரம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வர்க்கீஸ் ராஜா, கொட்டாரம் அரசு ஆஸ்பத்திரி மருத்துவ அதிகாரி மிதுன், சுகாதார ஆய்வாளர் செல்வ ரெங்கன் மற்றும் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர்.
தொடர்ந்து மீனவர்கள் அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் மீனவர்களுக்கு காய்ச்சல் அறிகுறி எதுவும் இல்லை என்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவர்கள் சொந்த ஊருக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
மீனவர்களை தற்போது பரிசோதனை செய்த போது அவர்களுக்கு கொரோனா அறிகுறி இல்லை. ஆனாலும் இந்த நோய் தாக்கி இருந்தால் 14 நாட்களுக்கு பிறகுதான் அறிகுறி தென்பட தொடங்கும். எனவே இந்த மீனவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.