கொரோனா தடுப்பு நடவடிக்கையில் கர்நாடக அரசு அரசியல் செய்யக்கூடாது - அனைத்துக்கட்சி கூட்டத்தில் டி.கே.சிவக்குமார் பேச்சு

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசியல் செய்யக்கூடாது என்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறினார்.

Update: 2020-03-30 00:00 GMT
பெங்களூரு, 

கர்நாடகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசிக்க பெங்களூருவில் அனைத்துக்கட்சி கூட்டம் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கலந்து கொண்டு பேசியதாவது:-

தாமதமானாலும் முதல்-மந்திரி எடியூரப்பா அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளதை வரவேற்கிறேன். இந்த கொரோனாவை தடுக்கும் விஷயத்தில் நாங்கள் அரசியல் செய்ய விரும்பவில்லை. அரசியல் வேறு, நமது மாநிலத்தின் பிரச்சினை வேறு. ஒன்றோடு ஒன்றை தொடர்புபடுத்த நாங்கள் விரும்பவில்லை. கொரோனாவை தடுக்க மாநில அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைக்கும் காங்கிரஸ் ஆதரவு அளிக்கிறது.

இந்த விஷயத்தில் மாநில அரசு, உலக சுகாதார நிறுவனம் வகுத்துள்ள வழிகாட்டுதல்படி இருக்க வேண்டும். இதில் மாநில அரசின் விருப்பப்படியோ அல்லது ஒரு கட்சியின் கொள்கைபடியோ இருக்கக்கூடாது. இதை அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்தக்கூடாது. கொரோனா உலக பிரச்சினை. இது ஆளுங்கட்சியின் பிரச்சினை அல்ல. அதனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் கர்நாடக அரசு அரசியல் செய்யக்கூடாது.

பாதுகாப்பு கவச உடைகள்

இதில் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். இந்த பிரச்சினையை கையாளுவதில் மந்திரிகள் இடையே ஒருங்கிணைப்பு இல்லை. ஒவ்வொருவரும் ஒரு கருத்தை கூறி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள். அதை முதல்-மந்திரி சரிசெய்ய வேண்டும். இல்லையெனில் மக்களிடையே இன்னும் பயம் அதிகரிக்கும். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு முகக்கவசங்கள், பாதுகாப்பு கவச உடைகள் இல்லை.

இதை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவ பணியாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள் இல்லாவிட்டால் அவர்கள் எப்படி பணியாற்ற முடியும். அத்தியாவசிய சேவைகள் சரியாக கிடைக்காததால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். வெளியூரை சேர்ந்த மக்கள் பெங்களூருவில் சிக்கிக் கொண்டுள்ளனர். அவர்கள் தங்களின் சொந்த ஊருக்கு செல்வது குறித்து அரசு உரிய முடிவு செய்ய வேண்டும். பட்டு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதற்கு அரசு தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு டி.கே.சிவக் குமார் பேசினார்.

மேலும் செய்திகள்