வீடுதோறும் வேப்பிலை தோரணம்: தெரு முழுக்க இயற்கை கிருமி நாசினி தெளிப்பு
தெருக்களில் இயற்கை கிருமி நாசினி தெளிக்கும் பணி கிராமப்பகுதிகளில் தீவிரமாக நடந்து வருகிறது.
தளவாய்புரம்,
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கையாக அரசு மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. தீயணைப்பு எந்திரங்களும் இதற்கு பயன்படுத்தப்படுகிறது. தடை உத்தரவால் வெறிச்சோடி கிடக்கும் பகுதிகளை கழுவி சுத்தம் செய்யும் வகையில் கிருமி நாசினி ராட்சத குழாய் மூலம் பீச்சி அடிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கிராமங்களில் மஞ்சள் பொடி, வேப்பிலை பொடி கலந்த இயற்கை கிருமி நாசினியை பொதுமக்களே தெளித்து வருகின்றனர். வீடுதோறும் வேப்பிலை தோரணமும் கட்டப்படுகிறது. ஒரு சில கிராமங்களில் நடந்து வந்த இந்த பணி இப்போது அனைத்து இடங்களிலும் நடக்க தொடங்கியுள்ளது.
சேத்தூர் மேட்டுப்பட்டி கொல்லன்கொண்டான் ரஸ்தா தெருவில் நேற்று மாலை பெண்கள் வீட்டு வாசலில் வேப்பிலை தோரணம் கட்டினர்.
மேலும் பெண்கள், சிறுவர்கள், இளைஞர்கள் என அனைவரும் திரண்டு இயற்கை கிருமி நாசினியான மஞ்சள்பொடி, வேப்பிலை கலந்து முதலில் அம்மன் கோவில் முன்பும், பின்பு வீட்டு வாசலிலும், தெருக்களிலும் தெளித்தனர். கொரோனா தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையாக தினமும் இதனை செய்ய உள்ளோம் என தெரிவித்தனர். இதேபோல தளவாய்புரம் ரெங்கநாதபுரத்திலும் இயற்கை கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
வத்திராயிருப்பு பேரூராட்சி 5-வது வார்டுக்குட்பட்ட நாடார் தெரு, வடக்கு தெரு பகுதியில் வேப்பிலை சாறு, மஞ்சள், பப்பாளி இலைச்சாறு போன்றவைகளை கலந்து தெரு பகுதிகளில் பொதுமக்கள் தெளித்தனர். இதேபோல் ஒவ்வொரு வார்டிலும் உள்ள பொதுமக்கள் தானாக முன்வந்து இதுபோன்ற கிருமி நாசினிகளை தெளிக்க வேண்டும் என பேரூராட்சி செயல் அலுவலர் வேண்டுகோள் விடுத்துள்ளார். செட்டியார்பட்டி பேரூராட்சியில் தீயணைப்பு வாகனம் மூலம் முக்கிய வீதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதில் பேரூராட்சி செயல் அலுவலர் அழகர், பணி மேற்பார்வையாளர் கல்யாணசுந்தரம், தீயணைப்பு நிலைய அதிகாரி ஜெயராம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.