கல்வராயன்மலையில், வெளிநபர்கள் வருகையை தடுக்க பாதையை அடைத்த கிராம மக்கள்

கல்வராயன்மலையில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களால் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளதாக கருதி பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்களது ஊருக்குள் வரும் பாதையை அடைத்து வருகின்றனர்.

Update: 2020-03-28 22:30 GMT
கச்சிராயப்பாளையம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயப்பாளையம் அருகே அடர்ந்த வனப்பகுதியான கல்வராயன்மலை உள்ளது. இங்குள்ள 170 மலை கிராமங்களில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். 

இந்த நிலையில் நாடு முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், அதை தடுக்க 144 தடை உத்தரவு மற்றும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிநாடுகளில் இருந்து சொந்த ஊர்களுக்கு திரும்பி வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களால் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்புள்ளதாக கருதி பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்களது ஊருக்குள் வரும் பாதையை அடைத்து வருகின்றனர்.

அந்த வகையில் கல்வராயன்மலையில் உள்ள கொடமாத்தி கிராமத்தை சேர்ந்த மக்கள், வெளிநபர்கள் தங்களது ஊருக்குள் வருவதை தடுக்கும் வகையில் கிராம எல்லையில் உள்ள பாதையில் கம்பு கட்டி பாதையை அடைத்துள்ளனர். 

மேலும் 144 தடை உத்தரவு, ஊரடங்கு, கொடமாத்தி என்ற வாசகம் அடங்கிய பதாகையை தொங்கவிட்டுள்ளனர். இது சுற்று வட்டார கிராம மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் செய்திகள்