காஞ்சீபுரத்தில் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட ஓட்டலுக்கு ‘சீல்’ - மாவட்ட கலெக்டர் அதிரடி
காஞ்சீபுரத்தில் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட ஓட்டலுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி சீல் வைக்கப்பட்டத்து.
காஞ்சீபுரம்,
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. பால், காய்கறி உள்பட அத்தியாவசிய பொருட்கள் கடைகள் மட்டும் திறந்து இருக்கும். பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க ஓட்டல்களில் சாப்பிட யாரையும் அனுமதிக்ககூடாது. பார்சல் மட்டுமே வழங்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் காஞ்சீபுரம் ரங்கசாமிகுளம் அருகே புதியதாக திறக்கப்பட்ட ஒரு ஓட்டலில் பொதுமக்கள் சாப்பிட அனுமதிக்கப்பட்டு கூட்டமாக இருப்பதாக, மாவட்ட கலெக்டருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா, காஞ்சீபுரம் தாசில்தார் பவானி ஆகியோர் அந்த ஓட்டலுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது கட்டுப்பாட்டை மீறி அந்த ஓட்டலில் பொதுமக்கள் கூட்டமாக அமர்ந்து சாப்பிடுவது தெரிந்தது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் அந்த ஓட்டலுக்கு வருவாய் துறையினர் ‘சீல்’ வைத்தனர்.