சூளகிரி அருகே கிராமத்திற்குள் நுழைந்த சீன அதிகாரிகள் 2 பேர் சுற்றி வளைப்பு - பொதுமக்கள் ஆவேசம்

சூளகிரி அருகே கிராமத்திற்குள் நுழைந்த சீன அதிகாரிகள் 2 பேரை பொதுமக்கள் சுற்றி வளைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-03-27 22:15 GMT
சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே ஒரு தனியார் நிறுவனத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு சீன நாட்டைச் சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க 2 அதிகாரிகள் கடந்த ஒரு ஆண்டாக வேலை செய்து வருகிறார்கள். மேலும் இவர்கள் குருபரப்பள்ளியிலேயே வாடகை வீட்டில் தங்கியுள்ளனர்.

இந்த நிலையில் நேற்று அவர்கள் 2 பேரும் ஒரு காரில் சூளகிரி அருகே உள்ள பி.ஜி.துர்க்கம் பெருமாள் மலைக்கு சென்றனர். அந்த கிராமத்திற்குள் நுழைந்ததும் பொதுமக்கள் சந்தேகம் அடைந்து அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும் இதுகுறித்து சூளகிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசாரும், சூளகிரி வட்டார மருத்துவ அலுவலர் வெண்ணிலா மற்றும் மருத்துவக்குழுவினருடன் அங்கு வந்து அந்த சீன அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார்கள்.

மேலும் அவர்களது அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களும் சோதனை செய்யப்பட்டது. அத்துடன் அவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா? என்று பரிசோதிக்கப்பட்டது. இதில் அவர்கள் 2 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை பொதுமக்களிடம் இருந்து மீட்டு, குருபரப்பள்ளியில் உள்ள வீட்டில் போலீசார் கொண்டுபோய் சேர்த்தனர். மேலும், அந்த 2 பேர் பற்றிய அனைத்து விவரமும், குருபரப்பள்ளி போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே உள்ளதாகவும் தெரியவந்தது. இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்