கொரோனா அச்சுறுத்தலால் தனியார் டாக்டர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை நிறுத்தக்கூடாது - சுகாதாரத்துறை மந்திரி வலியுறுத்தல்
தனியார் டாக்டர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை நிறுத்தக்கூடாது என சுகாதாரத்துறை மந்திரி ராஜேஸ் தோபே வலியுறுத்தி உள்ளார்.
மும்பை,
கொரோனாவுக்கு எதிராக டாக்டர்கள் உயிரை பணயம் வைத்து போராடி வருகின்றனர். இந்தநிலையில் நேற்று மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஸ் தோபே முகநூலில் பொது மக்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
டாக்டர்கள் உயிரை பணயம் வைத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அந்த டாக்டர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு காப்பீடு வழங்க அரசு பரிசீலித்து வருகிறது.
கொரோனா அச்சுறுத்தலால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை நிறுத்திய தனியார் டாக்டர்கள் தொடர்ந்து சேவையாற்ற வேண்டும். வெளிநோயாளிகள் பிரிவு, அவசர மருத்துவ சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இது சரியல்ல.
கொரோனா பாதிப்பு தவிர்த்து மேலும் பல நோய்கள் உள்ளன. பிரசவம் அல்லது மாரடைப்பு ஏற்பட்டால் மக்கள் எங்கு செல்வார்கள்?. மருத்துவ பணி உன்னத பணி. டாக்டர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதை நிறுத்தக்கூடாது. நெருக்கடி நேரத்தில் உணர்வற்ற தன்மையை காட்டவேண்டாம். தற்போது மாநிலத்தில் 135 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இதில் 19 பேர் குணமாகி ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பி உள்ளனர். இதேபோல பொது மக்கள் ரத்த தானம் செய்ய முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.