கொரோனா வைரஸ் எதிரொலி: 30 பேர் மட்டும் கலந்து கொண்ட கும்பாபிஷேக விழா

கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்ட நிலையில் நேற்று காரைக்குடியில் 30 பேர் மட்டும் கலந்து கொண்ட கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

Update: 2020-03-26 23:15 GMT
காரைக்குடி, 

தற்போது இந்தியா முழுவதும் கொேரானா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் சார்பில் தொடர்ந்து 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டது. இதையடுத்து பஸ்கள், ரெயில்கள், விமானம் உள்ளிட்ட போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டன.

மேலும் பல்வேறு கடைகள் மூடப்பட்ட நிலையில் பொதுமக்கள் வெளியில் வராமல் வீட்டில் இருக்க அறிவுறுத்தப்பட்டு அதன்படி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் காரைக்குடி கணேசபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. முன்னதாக இந்த கோவிலில் திருப்பணி வேலைகள் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்த பணிகள் நிறைவு பெற்றதும் கும்பாபிஷேக பணிகள் நேற்று நடைபெற்றது. கும்பாபிஷேகம் தொடர்பாக கோவில் நிர்வாகிகள் காரைக்குடி தெற்கு போலீசாரிடம் அனுமதி கேட்டனர். போலீசார் சார்பில் கும்பாபிஷேகத்தில் அதிக அளவு மக்கள் கூட்டம் கூடக்கூடாது என்றும், அன்னதானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது என்றும் பல்வேறு நிபந்தனைகளை கூறி கும்பாபிஷேகத்திற்கு அனுமதி வழங்கினர்.

இதையடுத்து கடந்த 23-ந் தேதி முதல் கோவில் வளாகத்தில் யாகசாலைகள் அமைக்கப்பட்டு தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்தது. அதன் பின்னர் நேற்று காலை 5 மணிக்கு மீண்டும் கோவில் நடை திறக்கப்பட்டு அதன் பின்னர் கடம் புறப்பாடு நடைபெற்று, கும்பாபிஷேகம் நடைபெற்றது

இதில் பிள்ளையார்பட்டி தேனாட்சியம்மன் கோவில் அர்ச்சகர் காளீஸ்வர குருக்கள் தலைமையில் அர்ச்சகர்கள், கோவில் நிர்வாகிகள் உள்பட 30 பேர் மட்டும் முககவசம் அணிந்தபடி கலந்து கொண்டனர்.

மற்ற பக்தர்களை கோவிலுக்குள் போலீசார் அனுமதிக்கவில்லை. கோவில் அருகில் உள்ள வீடுகளின் மாடியில் நின்றபடி பக்தர்கள் கும்பாபிஷேக நிகழ்ச்சியை தரிசனம் செய்தனர். பின்னர் கும்பாபிஷேகம் முடிந்த பின்னர் காலை 10 மணிக்கு மீண்டும் கோவில் நடை சாத்தப்பட்டு அங்கிருந்த பக்தர்களை வீடுகளுக்கு செல்லும்படி போலீசார் அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்