முககவசம் அணிந்து பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவ-மாணவிகள்
மாணவ-மாணவிகள் முககவசம் அணிந்து பிளஸ்-2 தேர்வு எழுதினர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் வெளிநாடுகளில் தொழில்நிமித்தமாக சென்றிருந்த நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு அச்சம் காரணமாக சொந்த ஊருக்கு திரும்பி வந்துள்ளனர். இவ்வாறு ராமநாதபுரம் துணை காவல் கோட்டத்தில் 92 பேரும், பரமக்குடியில் 43 பேரும், திருவாடானையில் 85 பேரும், கமுதியில் 10 பேரும், ராமேசுவரத்தில் 21 பேரும், கீழக்கரையில் 44 பேரும், முதுகுளத்தூர் காவல் கோட்டத்தில் 22 பேரும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு மருத்துவ துறையின் தீவிர மருத்துவ பரிசோதனை மூலம் தினமும் கண்காணிக்கப்பட்டு தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய நிலையில் இவர்கள் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்றாலும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்பதால் 28 நாட்கள் மருத்துவ துறை கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
இதுதவிர காவல்துறை சார்பில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் உத்தரவின்பேரில் இவர்கள் அனைவரும் அந்தந்த காவல் கோட்ட அளவில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணித்து வருகின்றனர். மாவட்ட எல்லைகள் அனைத்து பகுதிகளிலும் மூடப்பட்டு சோதனை சாவடிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டுள்ளனர்.
ஒருபுறம் அரசு தன்சுத்தம், கைகழுவுதல், தள்ளி இருத்தல் போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தாலும் மறுபுறம் மக்கள் தங்களுக்கு தெரிந்த மருத்துவம் சார்ந்த முறைப்படியும், நம்பிக்கையின் அடிப்படை யில் பரிகார முறைப் படியும் நோய் அண்டாமல் இருக்க என்னென்ன செய்ய முடியுமோ அதனை செய்து வருகின்றனர்.
இன்னும் சிலர் அரசு பஸ்களில் வேப்பிலை மற்றும் துளசி இலையை தோரணம் போல் கட்டி நோய் தாக்குதலில் இருந்து தப்பிக்க நம்பிக்கையின் அடிப்படையில் வழிசெய்திருந்தனர். நேற்று நடைபெற்ற பிளஸ்-2 தேர்வின்போது ராமநாதபுரம் பள்ளிகளில் மாணவ-மாணவிகள் அனைவரும் முககவசம் அணிந்தபடி தேர்வு எழுதினர்.
முன்னதாக அவர்கள் தங்களின் கைகளை நன்றாக கழுவி சென்றனர். இதுதவிர, தேர்வு அறைகளில் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது. இவ்வாறு கொரோனா மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தினாலும் மக்களிடம் சுயஒழுக்கம், தன்சுத்தம், சுகாதாரம் உள்ளிட்ட பழக்கங்களை கற்றுகொடுத்துள்ளது என்றால் மிகையாகாது.