திருமணமான 4 ஆண்டுகளில் சோகம்: நர்சு தூக்குப்போட்டு தற்கொலை - ஆர்.டி.ஓ. விசாரணை
ஆவடி அருகே திருமணமாகி 4 ஆண்டுகளில் நர்சாக பணிபுரிந்து வந்த இளம்பெண் ஒருவர், கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஆவடி,
ஆவடி அடுத்த பட்டாபிராம் தீனதயாளன் நகர் காந்தியடிகள் தெருவை சேர்ந்தவர் சதீஷ் (வயது 34). இவர் பி.சி.ஏ.பட்டப்படிப்பு முடித்து விட்டு சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி ஜோஷிரீனா (32). இவரது சொந்த ஊர் திருவள்ளூர் மாவட்டம் மணவாளநகர் நாவலர்தெரு ஆகும். இவர் பி.எஸ்சி.நர்சிங் முடித்துவிட்டு சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணி புரிந்து வந்தார். இந்தநிலையில், இவர்களுக்கு கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ரேச்சல் (3) என்ற மகளும், ஜான் பிரபாகர் என்ற ஒரு வயது மகனும் உள்ளனர்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வேலையை ராஜினாமா செய்த ஜோஷிரீனா, வரும் 26-ந் தேதி சிங்கப்பூரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் நர்சாக வேலையில் சேர இருந்தார்.
இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு ஜோஷிரீனா அவரது கணவர் மற்றும் மாமனார், மாமியார் ஆகியோருக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டதாக தெரிகிறது.
இதையடுத்து மனமுடைந்த ஜோஷிரீனா நேற்று முன்தினம் இரவு கணவர் மற்றும் குழந்தைகள் படுக்கையறையில் தூங்கச்சென்ற பின்பு வீட்டின் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து, நேற்று காலை 7 மணிக்கு வீட்டில் இருந்தவர்கள் எழுந்து வெளியே வந்து பார்த்த போது, ஜோஷிரீனா தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பட்டாபிராம் போலீசார், ஜோஷி ரீனா உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் திருவள்ளூர் ஆர்.டி.ஓ. விசாரணை நடக்கிறது.