கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம்: கடற்கரைகள் மூடப்பட்டன

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகள் மூடப்பட்டன.

Update: 2020-03-22 00:15 GMT
சென்னை,

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் ஏற்கனவே பெரிய வணிக நிறுவனங்கள், தியேட்டர்கள், கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் சென்னையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை ஆகியவை நேற்று மாலை 3 மணிக்கு மூடப்பட்டன. அங்கு பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை இந்த கடற்கரைகளுக்கு பொதுமக்கள் நடைபயிற்சி மற்றும் பொழுதை கழிக்க வந்தனர். அவர்களிடம் போலீசார், “கடற்கரை மூடப்பட்டு உள்ளதால் வீடுகளுக்கு திரும்பி செல்லுங்கள்” என ஒலிபெருக்கி மூலம் அறிவித்தனர். குறிப்பாக காமராஜர் சாலையில் இருந்து கடற்கரைக்கு செல்லும் 8 பாதைகளும் முழுமையாக அடைக்கப்பட்டது. அங்கு பொதுமக்கள் வருவதை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.

வியாபாரிகள் பாதிப்பு

மெரினா கடற்கரை மூடப்பட்டதால் அங்கு வந்தவர்கள் சந்தோம் தேவாலயத்துக்கு பின்புறம் உள்ள கடற்கரையில் இருந்து சீனிவாசபுரம் வரை உள்ள பகுதிகளில் அமர்ந்து பொழுதை கழித்ததுடன், நடைபயிற்சியிலும் ஈடுபட்டனர்.

மெரினா கடற்கரையில் கவரிங் நகைக்கடை, விதவிதமான பாசிகடைகள் உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இது மட்டுமல்லாமல் மீன்களை சுடச்சுட பொறித்து விற்பனை செய்யும் கடை உள்ளிட்ட பல கடைகளும் உள்ளன. அந்த கடைகளை வியாபாரிகள் மூடிவிட்டு சென்றனர்.

மீன் விற்பனை சூடுபிடித்தது

கடற்கரை மூடப்பட்டதால் சுண்டல், சுக்குகாபி வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், குதிரை சவாரி மூலம் தொழில் நடத்தி வரும் 10-க்கும் மேற்பட்டோரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குதிரை சவாரி மூலம் தினமும் ரூ.700 வரை வருமானம் கிடைக்கும். தற்போது குதிரைக்கு உணவு அளிப்பதற்கு பணம் இல்லாமல் கஷ்டப்படுவதாக அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

மெரினா கடற்கரை மூடப்பட்டாலும் பட்டினப்பாக்கம் மீன் மார்க்கெட்டில் வியாபாரம் சூடுபிடித்தது. கொரோனா வதந்தியால் கோழிக்கறி விற்பனை மந்தமாகி உள்ள நிலையில் பல்வேறு வகையான மீன்களை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்குவதை பார்க்க முடிந்தது.

கன்னிமாரா நூலகம்

எழும்பூரில் உள்ள கன்னிமாரா பொது நூலகம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். தமிழக அரசு உத்தரவை ஏற்று நூலகம் வருகிற 31-ந்தேதி வரை மூடப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் அனுமதி இல்லை என்ற விளம்பர பலகை கதவில் தொங்கவிடப்பட்டு இருந்தது. இதனால் நூலகத்துக்கு வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

நூலகம் மூடப்பட்டுள்ளதால் கன்னிமாரா நூலக வளாகத்தில் நடந்து வரும் கட்டுமானப்பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. இதேபோல் கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகமும் வருகிற 31-ந்தேதி வரை மூடப்பட்டு உள்ளது. இங்கு போட்டித்தேர்வுகளுக்கு படிக்கும் மாணவர்கள் அதிகம் வந்து செல்வார்கள். நூலகம் மூடப்பட்டதால் மாணவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

மேலும் செய்திகள்