தென்காசி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை: குற்றாலம் பூங்கா– நூலகம் மூடல்

தென்காசி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

Update: 2020-03-21 22:45 GMT
தென்காசி, 

தென்காசி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இதையொட்டி குற்றாலம் பூங்கா, அரசு பொது நூலகம் மூடப்பட்டது.

தடுப்பு நடவடிக்கை 

உலகின் பல நாடுகளில் பரவி வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றன. தென்காசியில் கடந்த சில நாட்களாக இந்த நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தென்காசி மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வருபவர்கள் அனைவரும் கை கழுவிவிட்டு உள்ளே செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

அதன் அருகில் 3 இடங்களில் சோப்பு மற்றும் தண்ணீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆஸ்பத்திரிக்கு உள்ளே செல்லும்போதும் வெளியே செல்லும் போதும் கைகளை கழுவிவிட்டு செல்ல வேண்டும். நேற்று ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் ஜெஸ்லின் மற்றும் டாக்டர்கள் இதுகுறித்து ஆஸ்பத்திரிக்கு வந்தவர்களிடம் விளக்கி கூறினார்கள்.

பூங்கா மூடல் 

பஸ்நிலையத்தில் பஸ்களுக்கு கிருமி நாசினி மருந்து அடிக்கப்படுகிறது. குற்றாலத்தில் நகர பஞ்சாயத்துக்கு சொந்தமான 3 பூங்காக்கள் மூடப்பட்டன. வருகிற 31–ந் தேதி வரை தென்காசி பொது நூலகம் அடைக்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் வாசலில் சோப்பு மற்றும் தண்ணீர் வைக்கப்பட்டு அலுவலகத்திற்குள் செல்பவர்கள் கைகளை கழுவிவிட்டு செல்லுமாறு கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து சுகாதாரத்துறை மற்றும் நகரசபை நிர்வாகம் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை தென்காசியில் ஏற்படுத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்