கொரோனா வைரஸ் எதிரொலி: கோவையில் பூக்கள் விலை கடும் வீழ்ச்சி - ஒரு கிலோ மல்லிகை ரூ.200-க்கு விற்பனை

கொரோனா வைரஸ் எதிரொலியாக கோவையில் பூக்கள் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்து உள்ளது. ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Update: 2020-03-21 07:45 GMT
கோவை, 

கோவையில் உள்ள பூ மார்க்கெட்டுக்கு ஆலாந்துறை, காரமடை, பொள்ளாச்சி, உடுமலை, திண்டுக்கல், தேவக்கோட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து செவ்வந்தி, செண்டுமல்லி, சம்பங்கி, அரளி உள்ளிட்ட பூக்கள் கொண்டுவரப்படுகின்றன. மேலும் நிலக்கோட்டை, கள்ளிப்பாளையம், சத்தியமங்கலம், மதுரை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து மல்லிகை, முல்லை போன்ற பூக்களின் வரத்து இருக்கும். இதுதவிர பட்டன் ரோஜா, ரோஜா பூக்கள் பெங்களூரு, ஓசூரு, ஊட்டி ஆகிய பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படுகிறது.

இங்கு ஒருநாளைக்கு சராசரியாக 150 டன் பூக்கள் வரத்து இருக்கும். இதில் மல்லிகை, முல்லை ஆகிய பூக்கள் மட்மே 30 டன் முதல் 40 டன் வரை இருக்கும்.

இந்தநிலையில் தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருவதால் கோவை பூமார்க்கெட்டில் பூக்களின் வரத்து குறைந்து உள்ளது. கொரோனா வைரஸ் எதிரொலியாக பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பூமார்க்கெட்டுக்கு வரவில்லை. இதனால் பூக்களின் நுகர்வு வெகுவாக குறைந்தது.

இதன்காரணமாக பூக்கள் தேக்கம் அடைந்து அதன் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்து உள்ளது. அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ ரூ.800-க்கு விற்பனையான மல்லிகைப்பூ நேற்று ரூ.200-க்கு விற்கப்பட்டது.

இதுகுறித்து பூ வியாபாரிகள் கூறியதாவது:-

கோவை பூ மார்க்கெட்டில் இருந்து கேரளாவுக்கு டன் கணக்கில் பூக்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. தற்போது கொரோனா வைரஸ் காரணமாக அங்கு பூக்களை அனுப்ப முடியவில்லை. இதனால் பூக்கள் தேக்கம் அடைந்து உள்ளன. பூக்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் குறைந்து, நுகர்வு சரிவை சந்தித்து உள்ளது. இதனால் பூக்கள் விலை குறைந்து காணப்படுகிறது. இந்தநிலை நீடித்தால் பூ வியாபாரிகள், பூக்கள் உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். மக்கள் தங்களை தனிமைப்படுத்துவதன் மூலமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்று பிரதமர் நரேந்திரமோடி கூறி உள்ளார். அதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஒருநாள் பூ மார்க்கெட்டுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக பூ மார்க்கெட்டில் பதாகைகள் வைக்கப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் பூக்களின் விலை விவரம் கிலோவில் வருமாறு (அடைப்புக்குறிக்குள் பழைய விலை):- ஜாதிமல்லி ரூ.200 (ரூ.700), செவ்வந்தி ரூ.120 (ரூ.200), சம்பங்கி ரூ.120 (ரூ.300), பட்டன் ரோஜா ரூ.80 (ரூ.180)-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்