கொரோனா வைரஸ் பீதிக்கு மத்தியில் பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவர்கள்
கொரோனா வைரஸ் பீதிக்கு மத்தியில் கடலூர் மாவட்டத்தில் திட்டமிட்டபடி பிளஸ்-2 பொதுத்தேர்வை மாணவ-மாணவிகள் எழுதினர்.
கடலூர்,
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த 2-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருவதால், பிளஸ்-2 பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்தது. இதற்கிடையே பிளஸ்-2 பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என நேற்று முன்தினம் பள்ளி கல்வித்துறை அறிவித்தது.அதன்படி நேற்று நடைபெற்ற உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், புள்ளியியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கான தேர்வை கடலூர் மாவட்டத்தில் 229 மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் 14 ஆயிரத்து 73 மாணவர்களும், 16 ஆயிரத்து 449 மாணவிகளும் என மொத்தம் 30 ஆயிரத்து 522 மாணவ- மாணவிகள் 108 மையங்களில் எழுதினர்.
ஆர்வமுடன் எழுதிய மாணவர்கள்
இந்த தேர்வுக்காக காலை 9 மணி முதல் மாணவ- மாணவிகள் தங்களுக்காக ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களுக்கு வரத்தொடங்கினர். பின்னர் காலை 10 மணிக்கு மாணவர்களுக்கு வினாத்தாள் வழங்கப்பட்டது. இதையடுத்து 10.10 மணிக்கு விடைத்தாள்கள் வழங்கப்பட்டதும், அதில் மாணவ- மாணவிகள் தங்களது பெயர், தேர்வு எண் உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்து கையொப்பமிட 5 நிமிடம் ஒதுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து காலை 10.15 மணிக்கு தேர்வு தொடங்கியது. கொரோனா வைரஸ் பீதிக்கு மத்தியிலும் மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் தேர்வு எழுதியதை காணமுடிந்தது. இந்த தேர்வு மதியம் 1.15 மணிக்கு முடிவடைந்தது.
கண்காணிப்பு
தேர்வின் போது மாணவர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடாமல் இருக்க மாவட்டத்தில் முதன்மை அறை கண்காணிப்பாளர்கள், தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், துறை அலுவலர்கள் மற்றும் 8 பறக்கும் படையினரும், 264 உறுப்பினர்களை கொண்ட நிலை படையினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.