மருந்தகம், உணவு நிறுவனங்கள் திறந்திருக்க அனுமதி - ராமநாதபுரம் கலெக்டர் அறிவிப்பு
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், கலெக்டர் தெரிவித்ததாவது:-
ராமநாதபுரம்,
தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்திட முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு முற்றிலும் இல்லை என்ற போதிலும் அண்டை மாநிலங்களிலிருந்து இந்நோய் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்திட வேண்டும்.
அதன் ஒரு பகுதியாக ஏற்கனவே கோவில்கள், பள்ளி, கல்லூரிகள் மற்றும் சுற்றுலாத்தலங்கள் மாவட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, மருந்தகம் மற்றும் உணவு சார்ந்த நிறுவனங்களை தவிர மற்ற அனைத்து நிறுவனங்களும் இன்று(சனிக்கிழமை) முதல் அடைக்கப்பட வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மாவட்ட அளவில் 33 மருத்துவக்குழுக்கள் அமைக்கப்பட்டு அவற்றின் மூலமாக மாவட்ட எல்லைகளிலுள்ள 9 சோதனை சாவடிகளில் வெளி மாவட்டங்களிலிருந்து வரும் மக்களை கண்காணிக்கவும், 15 குழுக்கள் பொதுமக்களிடம் கொரோனா வைரஸ் பற்றிய அச்சத்தை தவிர்த்திடும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அண்டை நாடுகளிலிருந்து திரும்பியவர்களை தொடர்ந்து கண்காணித்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் கொரோனா வைரஸ் நோய் தொற்று தடுப்பு அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் முழு மனதுடன் தங்களது பங்களிப்பை அளித்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.