மராட்டியத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரம் மக்கள் ஊரடங்கையொட்டி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நாளை ஓடாது மின்சார ரெயில்கள் குறைந்த அளவில் இயக்கப்படும்

மராட்டியத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் மக்கள் ஊரடங்கையொட்டி நாளை எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஓடாது என்றும், மின்சார ரெயில்கள் குறைந்த அளவில் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2020-03-20 23:33 GMT
மும்பை,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பது பற்றியும், இந்த வி‌‌ஷயத்தில் மக்கள் அரசுடன் ஒத்துழைத்து செயல்படுவது தொடர்பாகவும் பிரதமர் மோடி நேற்று முன்தினம் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்.

‘மக்கள் ஊரடங்கு’

அப்போது, மக்கள் தங்களை தனிமைப்படுத்துவதன் மூலமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்றும், எனவே நாளை (ஞாயிற்றுக்கிழமை) மக்கள் ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என்றும், அன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மக்கள் ஊரடங்கு நடவடிக்கையின் மூலம் எதிர்காலத்தில் ஏற்படும் சவால்களை சந்திப்பதற்கு நம்மை நாம் தயார்படுத்திக் கொள்ள முடியும் என்றும் அப்போது அவர் கூறினார்.

எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஓடாது

பிரதமரின் இந்த அறிவிப்பை தொடர்ந்து இந்தியா முழுவதும் அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் நாளை ரத்து செய்யப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது. ரத்து செய்யப்பட்ட ரெயில்களில் உள்ள முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறி உள்ளது.

மராட்டியத்தில் நாளை அதிகாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை புறப்படும் எக்ஸ்பிரஸ் மற்றும் நெடுந்தூர ரெயில்கள் அனைத்தும் முழுவதுமாக ரத்து செய்யப்படும் என்றும் ரெயில்வே அறிவித்து இருக்கிறது.

புறநகர் மின்சார ரெயில்கள் மிக குறைவாகவே இயக்கப்படும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

தமிழகம்

தமிழகத்தில் நாளை மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால் பஸ்-ரெயில்கள் ஓடாது என்றும், மார்க்கெட்டுகள், கடைகள், ஓட்டல்கள் மூடப்பட்டு இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் விடுத்துள்ள வேண்டுகோளின்படி நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை போக்குவரத்துக்கழகங்களின் பஸ்கள் எதுவும் ஓடாது என்றும், மெட்ரோ ரெயில்களும் அன்றைய தினம் இயங்காது என்றும், தன்னலம் கருதாமல் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் அனைவருக்கும் நாளை மாலை 5 மணிக்கு மக்கள் நன்றி தெரிவிக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார். மேலும் அனைத்து அரசு மற்றும் தனியார் நூலகங்கள் இன்று (சனிக்கிழமை) முதல் 31-ந்தேதி வரை மூடப்படுவதாகவும் அறிக்கையில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

மேலும் செய்திகள்